Published:Updated:

மகனைச் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! - வேலூர் அதிர்ச்சி

சுப்பிரமணி
சுப்பிரமணி

பெற்ற மகனையே துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிய தந்தையின் கொடூரச் செயல், அடுக்கம்பாறை மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

வேலூரை அடுத்துள்ள அடுக்கம்பாறை, பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், இரவு நேரக் காவலாளியாக வேலை செய்துவந்தார். சுப்பிரமணிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்தநிலையில், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு செய்துவந்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட வினோத்
கொலை செய்யப்பட்ட வினோத்

நேற்று இரவும் மதுபோதையில் மகளிடம் சண்டைபிடித்த சுப்பிரமணியை இளைய மகன் வினோத் கண்டித்திருக்கிறார். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகனுடன் மோதலில் ஈடுபட்டார். மோதல் முற்றியநிலையில், வீட்டில் வைத்திருந்த நீளமான இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்து வந்து மகன் என்றும் பாராமல் சுட்டிருக்கிறார். வலதுபக்க மார்பில் குண்டு துளைத்ததில் வினோத் சுருண்டு விழுந்தார்.

வேலூர்: காரில் துப்பாக்கி, கத்தி, வாள்... முதல்வர் கூட்டத்துக்குச் செல்லும் திட்டமா? - நடந்தது என்ன?

தன் கண் முன்னாலேயே மகன் துடிதுடித்து இறப்பதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார் சுப்பிரமணி. துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

மேலும், வழக்கு பதிந்து அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த சுப்பிரமணியை இரவோடு இரவாகக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மகனைச் சுட்டுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இருந்தபோதும், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். பெற்ற மகனையே துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிய தந்தையின் கொடூரச் செயல், அடுக்கம்பாறை மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு