Published:Updated:

`பணத்தை தண்ணியா செலவழிப்பான்; கடத்தி செட்டிலாகணும்னு திட்டமிட்டோம்'- மாணவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

கடத்தப்பட்ட மாணவன் கோகுல்
கடத்தப்பட்ட மாணவன் கோகுல்

வேலூரில், ரூ.3 கோடி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவரை, சக மாணவர்களே கடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் கென்னடி. இரும்பு கேட் தயாரித்தல் போன்ற `கிரீல் வொர்க்' வேலை செய்கிறார். இவரின் மகன் கோகுல் (19), லத்தேரியிலிருந்து கே.வி.குப்பம் செல்லும் வழியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற கோகுல் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நள்ளிரவில் கோகுலின் செல்போன் நம்பரிலிருந்து அவரின் தாய்க்கு போன் வந்தது. அதில் பேசிய நபர்கள், ``உங்க பையனை நாங்கதான் கடத்தி வச்சுருக்கோம். பத்திரமா இருக்கான். நீங்க கஷ்டப்பட வேணாம். கோகுல் உயிரோடு வேணும்னா ரூ.3 கோடியை ரொக்கப் பணமாக எடுத்துகிட்டு, நாங்க சொல்ற இடத்துக்கு வாங்க. 

கோகுலின் அடுக்குமாடி வீடு
கோகுலின் அடுக்குமாடி வீடு

போலீஸ்கிட்ட போனா, உன் பையன துண்டு துண்டா வெட்டி பாக்ஸ்லதான் வீட்டுக்கு அனுப்பி வைப்போம். உன் பையன அறுத்துபோட்டுப் போக எங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. உங்கள பொறுத்தவரைக்கும் ரூ.3 கோடிங்கிறது பெரிய விஷயமல்ல. பணம் இருக்கா இல்லையானு டக்குனு சொல்லுங்க. எனக்கு பேசறதுக்கு டைம் இல்ல. நைட்டுக்குள்ள பணத்தைச் செட்டில் பண்ணா... உன் பையன் காலையில வீட்ல இருப்பான். எங்கள பிடிக்க ஆள் கூட்டிகிட்டு வந்தா உன் பையன குத்திப்போட்டு போயிடுவோம்’’ என்று தெனாவட்டாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர். இந்த ஆடியோ உரையாடலைக் கோகுலின் தாய் செல்போனில் ரெக்கார்ட் செய்துகொண்டார். உடனே தாமதிக்காமல் காவல்துறையினரை அணுகி புகார் அளித்தார். 

எஸ்.பி பிரவேஷ்குமாரின் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி-க்கள் ராதாகிருஷ்ணன், சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், கோகுலின் தாயார் நடந்துகொண்டார். கடத்தல் கும்பலிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. ``என்னால் 50 லட்சம் ரூபாய்தான் தயார் செய்ய முடிந்தது’’ என்று கோகுலின் தாய் கூறினார். கடத்தல் கும்பல் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு, நள்ளிரவில் காட்பாடியை அடுத்த வள்ளிமலை பகுதிக்கு வரச் சொல்லினர். ஒரு பையில் கச்சிதமாக நறுக்கப்பட்ட காகித கட்டுகளை அடுக்கி அதன்மேல் சில 2 ,000 ரூபாய் பணத்தை வைத்து கோகுலின் தாயிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர். சாதாரண உடையில் போலீஸாரும் பின்தொடர்ந்தனர்.

மாணவன் கோகுல்
மாணவன் கோகுல்

வள்ளிமலைக்கு உறவினர் ஒருவருடன் காரில் சென்ற தாய், மகனைக் காண்பிக்குமாறு கடத்தல் கும்பலிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீஸார் அதிரடியாகப் பாய்ந்து சென்று கடத்தல் கும்பலைச் சுற்றிவளைத்தனர். மாணவன் கோகுல் மீட்கப்பட்டார். கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். விசாரணையில் அந்த 4 பேரும் கோகுலுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரையும் லத்தேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் கிடுக்கிப்பிடியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடத்தல் கும்பல் கூறுகையில், ``நாங்கள் கோகுலுடன்தான் படிக்கிறோம். தினமும் காலையில் அவரின் அப்பா காரில் கோகுலை அழைத்து வந்து கல்லூரியில் விட்டுச்செல்வது வழக்கம்.

மாலை நேரத்தில் கல்லூரியிலிருந்து வெளியே வரும் கோகுல் பைக்கில் செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்டு காட்பாடி சென்று அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் செல்வதை பார்த்திருக்கிறோம். எல்லோரிடமும் வெகுளியாகப் பழகும் கோகுல் பணத்தைத் தண்ணியாகச் செலவழிப்பான். பணக்கார வீட்டுப் பையன் என்பதால், அவரைக் கடத்தி பணம் பறித்தால் எங்கள் வாழ்க்கை செட்டிலாகிடும் என்று திட்டமிட்டோம். அதற்காக எங்களுக்குத் தெரிந்த வெளியாட்கள் இருவரைக் கல்லூரிக்கு வெளியே நேற்று மாலை பைக்கில் நிற்க வைத்தோம். நாங்கள் நினைத்ததைப் போலவே, வகுப்பு முடிந்து வெளியே வந்த கோகுல் எங்கள் ஆட்களின் பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறினார். அந்த நபர்கள் கோகுலை மிரட்டிக் கடத்திவந்து, எங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். 

கோகுலின் வீடு இருக்கும் குடியிருப்புப் பகுதி
கோகுலின் வீடு இருக்கும் குடியிருப்புப் பகுதி

பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தவிர, இவர்களிடம் கிடைக்கும் பணத்தை வைத்து 10 ஏழைக் குடும்பங்களுக்கு உதவவும் திட்டமிருந்தோம்’’ என்றனர். கடத்தலுக்கு உதவிய வெளியாட்கள் இருவரைப் பிடிக்கவும் போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவன் கோகுல் மீதும் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில், அவரின் தந்தை கென்னடி வெளியூருக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் கடத்தல் நாடகமாடி தாயை மிரட்டினால் பணம் கிடைக்கும் என்று கோகுலே நண்பர்களை வைத்துத் திட்டமிட்டாரா என்கிற கோணத்திலும் கோகுலிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு