Published:Updated:

`உன்னவிடப் பெரிய காக்கிகளையே பார்த்துட்டோம்!'- ரெய்டுக்குச் சென்ற எஸ்.ஐயை பதறவைத்த `புள்ளிங்கோ கேங்’

ராணிப்பேட்டையில், அரிவாளால் கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாடிய `புள்ளிங்கோ’ கேங்கைப் பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை, அந்தக் கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நரேஷ்
நரேஷ்

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்தவர் `007’ என்கிற நரேஷ் (35). அந்தப் பகுதியில், பிரபல மணல் கொள்ளையனாக வலம் வரும் இந்த நபர் மீது மணல் கடத்தல், அரசு அதிகாரிகளை மிரட்டியது, அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியில் சுற்றித்திரிந்த நரேஷ், ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அருகிலிருக்கும் ஆடு அறுக்கும் கிடங்கை ஏலம் எடுத்து, அங்கேயே தங்கினார்.

நரேஷ்
நரேஷ்

மேலும், இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு `புள்ளிங்கோ’ கேங்கை உருவாக்கி பொதுமக்களை அச்சுறுத்திவந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தன் பிறந்தநாளை ஆட்டுத் தொட்டியில் அமர்க்களமாகக் கொண்டாடினார் நரேஷ். தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸார் அங்கு சென்று ரகசியமாகக் கண்காணித்தனர். நரேஷ் வீச்சரிவாளால் `கேக்’ வெட்டியதைப் பார்த்து அதிர்ந்துபோன போலீஸார், அந்த கேங்கைச் சுற்றிவளைத்தனர். 

`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

நரேஷ் உட்பட அனைவரும் நாலாப் பக்கமும் ஓடினர். இது சம்பந்தமாக, வழக்கு பதிவு செய்த போலீஸார், நரேஷை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். போலீஸாரிடம் சிக்காமல் அவர் தொடர்ந்து `டிமிக்கி’ கொடுத்துவந்தார். இந்த நிலையில், நரேஷின் நெருங்கிய கூட்டாளியான இளம்பரிதி என்பவரின் பிறந்த நாள் விழாவையும், அதே ஆட்டுத் தொட்டியில் கடந்த 7-ம் தேதி அரிவாள் கத்தியுடன் `புள்ளிங்கோ’ கேங் கொண்டாடியது. 

அரிவாள்
அரிவாள்

இளம்பரிதி மீதும் 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவு குற்றவாளியான நரேஷ், `தலைவன்’ என்ற முறையில் அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ராணிப்பேட்டை காவல்துறையினருக்கு உடனே தகவல் கசிந்தது. அந்த நேரத்தில் பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஒருவர் மட்டுமே அங்கு சென்று நரேஷைப் பிடிக்க முயன்றனர். 

`புள்ளிங்கோ கேங்’ ஆத்திரமடைந்து, ``ஏ... போலீஸு, உன்னவிடப் பெரிய காக்கிகளையே பார்த்துட்டோம். அண்ணனை விட்டுவிட்டு ஒழுங்கா ஓடிப் போயிடு. இங்கேயே குத்திப் போட்ருவோம்’’ என்று மிரட்டி அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றனர். நிலைமை மோசமாக இருந்ததால், நரேஷை அங்கேயே விட்டுவிட்டுப் பின்வாங்கிய அந்தக் காவலர்கள் விரைந்து சென்று ராணிப்பேட்டை டி.எஸ்.பி-யிடம் நடந்ததை விவரித்தனர். 

நரேஷ்
நரேஷ்

இதையடுத்து, நரேஷை கைதுசெய்ய இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கு டி.எஸ்.பி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார், நரேஷைப் தேடிப்பிடித்து கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியான இளம்பரிதி உள்பட `புள்ளிங்கோ’ கேங்கைச் சேர்ந்த மேலும் 5 பேரை வலைவீசித் தேடிவருவதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம், ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.