Published:Updated:

15 கிலோ தங்கநகைகள்... நள்ளிரவில் திருட்டு; சுடுகாட்டில் பதுக்கல்! -பலே கொள்ளையன் சிக்கியது எப்படி?

கொள்ளையன்

வேலூரில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரைத் துளையிட்டு நகைகளை அள்ளிச்சென்ற கொள்ளையன் சிக்கினான். அவனிடமிருந்து நகைகளும் மீட்கப்பட்டிருக்கின்றன

15 கிலோ தங்கநகைகள்... நள்ளிரவில் திருட்டு; சுடுகாட்டில் பதுக்கல்! -பலே கொள்ளையன் சிக்கியது எப்படி?

வேலூரில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரைத் துளையிட்டு நகைகளை அள்ளிச்சென்ற கொள்ளையன் சிக்கினான். அவனிடமிருந்து நகைகளும் மீட்கப்பட்டிருக்கின்றன

Published:Updated:
கொள்ளையன்

வேலூர், தோட்டப்பாளையம் பகுதியிலிருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பின்பக்கச் சுவரைத் துளையிட்டு 15 கிலோவுக்கும் மேலான தங்க நகைகள், 500 கிராம் வைரக் கற்கள் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மாறுவேடத்தைக் களைத்து, அந்தப் பொருள்களை நகைக்கடையின் பின்புறப் பகுதியிலேயே தீயிட்டு எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதில், கர்லிங் ஸ்டைல் விக் மட்டுமே எரியாமல் போலீஸாரின் கைக்குக் கிடைத்தது. மோப்ப நாய்கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால், துப்பு ஏதும் கிடைக்கவில்லை.

ஜோஸ் ஆலுக்காஸ்
ஜோஸ் ஆலுக்காஸ்

பின்னர், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மெலிந்த உடல் தோற்றம்கொண்ட ஒரு நபர் சிங்க முகமூடியை அணிந்துகொண்டு கேமராக்களில் ஸ்பிரே அடிப்பது பதிவாகியிருந்தது. அது தொடர்பான வீடியோ காட்சிகளையும் காவல்துறையினரே வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு ஒரு மணி முதல் மூன்று மணிக்குள்ளாக அந்தப் பகுதியிலிருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

நான்கு டவர்களில் 3,86,628 செல்போன்களின் சிக்கனல்கள் பதிவாகியிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். பல்வேறு நிலை வடிகட்டல்களுக்குப் பின் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான எட்டு தனிப்படைகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. கொள்ளையர்கள் வெளிமாநிலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற கோணத்திலும் காட்பாடி ரயில் நிலையத்திலிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையைப்போலவே இந்த வழக்கையும் நகர்த்திச் சென்றனர்.

இந்த நிலையில்தான், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வேலூரை அடுத்த பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்ற 28 வயதே ஆன இளைஞர் பிடிபட்டிருக்கிறார்.

சிங்க முகமூடி அணிந்திருந்த சிசிடிவி காட்சி
சிங்க முகமூடி அணிந்திருந்த சிசிடிவி காட்சி

இவர்தான் சிசிடிவி-யில் பதிவாகியிருந்த சிங்க முகமூடி அணிந்திருந்த கொள்ளையர் என்பதும் தெரியவந்திருக்கிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளிகொண்டா அருகே உத்திரகாவேரி ஆற்றின் கரையோரமிருக்கும் சுடுகாட்டில் கொள்ளையடித்த நகைகளைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீஸார் அந்த இடத்துக்குக் கொள்ளையர் டீக்காராமனை அழைத்துச் சென்றனர்.

அவர் காட்டிய நான்கைந்து இடத்தில் பள்ளம் தோண்டிப் பார்த்தபோது, கொள்ளையடித்த நகைகள் மூட்டைகட்டி பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்களையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான டீக்காராமனைப் போலீஸார் பிடித்த விதமும் சுவாரஸ்யமூட்டுகிறது. டீக்காராமன் கட்டட வேலை செய்துவந்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம், பள்ளிகொண்டாவிலிருக்கும் பள்ளியில் கட்டட வேலை செய்யும்போது, அங்கிருந்த லேப்டாப்பைத் திருடிச் சென்றிருக்கிறார்.

கொள்ளையன் டீக்காராமன்
கொள்ளையன் டீக்காராமன்

இந்தச் சம்பவம் தொடர்பாக, டீக்காராமனை போலீஸார் கைதுசெய்து சிறையிலும் அடைத்திருக்கிறார்கள். ஜாமீனில் வெளிவந்தவர் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே, இரண்டு மூன்று வழக்குகள் அவர்மீது பதியப்பட்டிருந்ததால், போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள்தான் இருந்திருக்கிறார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில், பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சிங்க முக வேடம் அணிந்திருந்த கொள்ளையன் ஒல்லியாக இருப்பதை வைத்து, தற்சமயம் ஜாமீனில் வந்த கொள்ளையர்களின் அடையாளமும் ஒப்பீடு செய்யப்பட்டது. சிங்க முக வேடத்துடன் ஒத்துப்போன நபர்களின் செல்போன் அழைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 14-ம் தேதி நள்ளிரவு டீக்காராமனின் செல்போன் எண்ணின் சிக்னலும், நகைக்கடை பகுதியில்தான் இருந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நகைகள் புதைக்கப்பட்டிருந்த இடம்
நகைகள் புதைக்கப்பட்டிருந்த இடம்

அதைவைத்துத்தான் டீக்காராமனை போலீஸார் கொத்தாகத் தூக்கியிருக்கிறார்கள். கொள்ளையடித்த நகைகளை சுடுகாட்டுப் பகுதியில் புதைத்துவைத்துவிட்டு, அதே பகுதியிலிருக்கும் ஒரு வீட்டை ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். வீட்டு உரிமையாளர் ஒரு வயதான பெண். அவரிடம் ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வீட்டுச் சாவியை வாங்கிச் சென்றிருக்கிறார். வீட்டுக்குள் இருந்தபடியே போலீஸின் நடவடிக்கையைக் கண்காணித்தும் வந்திருக்கிறார். இந்த வீட்டின் கதவை உடைத்துத்தான் போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கொள்ளைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் போக்குக் காட்டியிருக்கிறார் டீக்காராமன். போலீஸார் தங்கள் பாணியைக் காட்டிய பின்னரே கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். ஆனாலும், நகைகளைப் புதைத்து வைத்த இடம் மறந்துபோய்விட்டதாகவும் போலீஸாருக்குத் தண்ணி காட்டியிருக்கிறார். போலீஸார் கோபத்தைக் கொட்டிய பின்னரே, நகைகளைப் புதைத்துவைத்த இடத்தைக் காண்பித்திருக்கிறார் என்று காவல்துறை தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.