Published:Updated:

`மகளைத் தூக்கியெறிந்து வழக்கறிஞர்கள் மூலம் தலைமறைவு!’ -ரவுடி ஜானி மனைவியைத் தேடும் வேலூர் போலீஸ்

மனைவி ஷாலினியுடன் ரவுடி ஜானி
மனைவி ஷாலினியுடன் ரவுடி ஜானி

பல இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து குற்றச்செயல்களுக்கு ஜானி பயன்படுத்துவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வேலூரை அடுத்த காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி (34). இவர் மீது 6 கொலை, 8 ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உட்பட 45-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ‘என்கவுன்டர்’ லிஸ்ட்டில் முதல் ஆளாக உள்ள ஜானி பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாகச் சொல்கின்றனர் போலீஸார்.

வெவ்வேறு கெட்டப்பில் ஜானி
வெவ்வேறு கெட்டப்பில் ஜானி

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களிடம் ரவுடி ஜானி `இன்டர்நெட்’ போன் கால் மூலம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. மிரட்டலுக்கு ஆளான நபர்கள் ஜானி மீது புகார் கொடுக்கப் பயந்துகொண்டு அவர் சொல்லும் வங்கிக் கணக்கிலும் அடியாட்களிடமும் பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். தலைமறைவாக உள்ள ஜானியின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதால் தொழிலதிபர்களும் வணிகர்களும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜானிக்கு அவரின் காதல் மனைவி ஷாலினி (26) மூலமாகத்தான் அனைத்து உதவிகளும் கிடைக்கின்றன என்பதை போலீஸார் கண்டறிந்தனர். தொழிலதிபர்களிடமிருந்து பறிக்கப்படும் பணமும் ஷாலினியிடம்தான் கொடுக்கப்படுகிறது. ஷாலினியின் நடமாட்டத்தை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கிய காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான போலீஸார், மார்ச் 23-ம் தேதி அவரைக் கைதுசெய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

வெவ்வேறு கெட்டப்பில் ஜானி
வெவ்வேறு கெட்டப்பில் ஜானி

அப்போது, தனது 10 வயது மகளை அப்பாவின் அரவணைப்பில் விட்டிருந்தார் ஷாலினி. ஜானியின் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஷாலினிக்கு ஜாமீன் பெற முயற்சி செய்தனர். முதலில் ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து, முயற்சி செய்து கடந்த 29-ம் தேதி ஜாமீன் பெற்றனர். அதையடுத்து, `காட்பாடி காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்’ என்கிற நிபந்தனையுடன் சிறையிலிருந்து வெளியில் வந்தார் ஷாலினி.

ஆனால், சிறையிலிருந்து வந்த உடனேயே சில வழக்கறிஞர்களின் உதவியுடன் கணவன் ஜானி இருக்கும் இடத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஷாலினியின் மகளைப் பாதுகாத்துவந்த அவரது தந்தை `இனியும் என்னால், பேத்தியைப் பார்த்துக்கொள்ள முடியாது. நானே அன்றாடங்காய்ச்சி’ என்று கூறி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளித்தார். போலீஸார், அந்தச் சிறுமியை மீட்டு அரியூரில் உள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

மகளுடன் ஜானியின் மனைவி ஷாலினி
மகளுடன் ஜானியின் மனைவி ஷாலினி

நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக ஷாலினியையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். அதே சமயம், ஜானி பிடிபடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு மூலகாரணமாக இருப்பது சில வழக்கறிஞர்கள்தான் என்று சுட்டிக்காட்டும் போலீஸார், ஜானியின் 10 வயது மகளையும் மது அருந்தும் தீய பழக்கத்துக்கு அடிமைப்படுத்தி வைத்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலையும் கூறியிருக்கிறார்கள். மேலும், பல இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து குற்றச்செயல்களுக்கு ஜானி பயன்படுத்துவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொடூரக் குற்றவாளியாகப் பார்க்கப்படும் ஜானியைப் பிடிப்பதற்காக காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு