Published:Updated:

சிறை வார்டன் உட்பட 3 பேர் கொடூரக் கொலை! - வேலூரை அலறவைத்த ரௌடிக் கும்பல்

வேலூர்
வேலூர்

சிறை வார்டன் உட்பட மூன்று பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரை அடுத்துள்ள, அரியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காமேஷ் (29). நேற்று இரவு ஊசூர் சாலையிலுள்ள தனியார் நர்ஸிங் கல்லூரி அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த காமேஷை, காரில் வந்த கும்பல் திடீரென வழிமறித்தது. காமேஷ் சுதாரிப்பதற்குள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்தக் கும்பல் காரில் ஏறித் தப்பியது. பலத்த வெட்டுக்காயம் விழுந்ததில், காமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியூர் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொல்லப்பட்டவரின் சடலம்
கொல்லப்பட்டவரின் சடலம்

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், அரியூர் புலிமேடு கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலங்கள் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள், சென்னை புழல் சிறையில் வார்டனாகப் பணிபுரிந்துவந்த தணிகைவேல் (26) மற்றும் திவாகர் (25) எனத் தெரியவந்தது. இவர்களது உடல்களும் பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தி.மலை: தலையைக் குறிவைத்த கும்பல்; பிரபல ரௌடி `பங்க்’ பாபு கொலை! - பழிக்குப் பழி சம்பவமா?

விசாரணையில், நேற்று இரவு கொலை செய்யப்பட்ட காமேஷும், இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட இருவரும் நண்பர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இவர்களது நண்பரான வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அரியூரைச் சேர்ந்த ரௌடி ராஜா என்கிற எம்.எல்.ஏ ராஜாவும், அவரது கூட்டாளிகள் சிலரும் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்திருக்கிறது.

கொல்லப்பட்டவரின் சடலம்
கொல்லப்பட்டவரின் சடலம்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரௌடிக் கும்பல், தங்களைப் பழிதீர்க்கக் காத்திருந்த எதிர்த்தரப்பினரைக் கூண்டோடு தீர்த்துகட்ட திட்டம் வகுத்துள்ளது. அதன்படியே நேற்று இரவு சதித் திட்டத்தையும் அரங்கேற்றியுள்ளது. இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட திவாகர், சிறை வார்டன் தணிகைவேல் இருவரையும்தான் முதலில் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். இருவரின் கதையையும் முடித்த பிறகு, வரும் வழியில் காமேஷைக் கொன்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, ரௌடி ராஜா உட்பட ஏழு பேர் கும்பலைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு