Published:Updated:

` உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன்!' - விதவைப் பெண்ணிடம் அத்துமீறிய ஆர்.ஐ.

லோகேஸ்வரன்.கோ

விதவைச் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த, இளம்பெண்ணிடம் அத்துமீறிய வருவாய் அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். புகார் தொடர்பாக அந்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார்
வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவரை இழந்து வறுமையில் வாடுகிறார். எதிர்கால நலன் கருதி விதவைச் சான்றிதழ் கேட்டு சில நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியின் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் மனுக்கொடுத்தார்.

Representational image
Representational image

சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்திய வருவாய் ஆய்வாளர், அந்த விதவைப் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் போன் செய்தும் ஆபாசமாகப் பேசியதாகச் சொல்கிறார்கள்.

`உனக்கு விதவைச் சான்றிதழ் வேண்டாம். என்னோடு இருந்துவிடு. நானே உன்னை, ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன்’ என்றுகூறி எல்லை மீறியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வருவாய் ஆய்வாளரால், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறி கதறி அழுதார்.

பாலியல் புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்திவருகிறோம்.
டி.ஆர்.ஓ பார்த்திபன்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த வருவாய் ஆய்வாளரிடம் பாலியல் தொல்லை குறித்துக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவரோ, அதிகார தோரணையுடன் மிரட்டும் தொனியில் பேசி மழுப்பினார்.

ஆர்.ஐ செயலால் கோபமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள், அலுவலகத்தைவிட்டு அவரைத் தரதரவென வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்தனர்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஆர்.ஜ ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் பேசினோம். ``வருவாய் ஆய்வாளர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றார்.