Published:Updated:

கேங்ஸ்டர்களாக மாறிய சிறுவர்கள்... அச்சத்தில் உறைந்த வேலூர் மக்கள்!

ரௌடிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ரௌடிகள்...

சிறைக்குள் ரௌடிகள்...

கேங்ஸ்டர்களாக மாறிய சிறுவர்கள்... அச்சத்தில் உறைந்த வேலூர் மக்கள்!

சிறைக்குள் ரௌடிகள்...

Published:Updated:
ரௌடிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ரௌடிகள்...

வேலூரின் முக்கிய தாதாக்களான வசூர் ராஜாவும், காட்பாடி ஜானியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், உள்ளே இருந்தபடியே ஏராளமான வாலிபர்கள் மற்றும் சிறுவர்களை ரெளடிகளாக வளர்த்துவிட்டு, வேலூரை ஆட்டிப்படைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவர்கள் கத்திமுனையில் வியாபாரிகளிடமும் மக்களிடமும் மிரட்டிப் பணம் பறிப்பதால், வேலூர் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

வடதமிழக ரௌடிகளின் புகலிடமாக மாறிவருகிறது வேலூர் மாவட்டம். இங்கு கோலோச்சும் ரௌடிகள் அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நெட்வொர்க் வைத்துள்ளனர். இவர்களில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வசூர் ராஜா, காட்பாடி ஜானி ஆகியோர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் இவர்களின் கொட்டம் அடங்கவில்லை. தங்களது நெட்வொர்க் மூலமாக வேலூர் நகரில் சுமார் 100-க்கும் அதிகமான வாலிபர்களையும் சிறுவர்களையும் ரெளடி கேங்கில் இணையவைத்துள்ளனர்.

காட்பாடி ஜானி
காட்பாடி ஜானி

எதையும் செய்யத் துணிந்த இந்தக் கும்பலின் முதல் இலக்கு, வியாபாரிகள்தான். கடந்த வாரம் நடந்த சம்பவம் இது... வசூர் ராஜாவின் பெயரைச் சொல்லி வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தினசரி மாமூல் வசூலிக்கும் இந்தக் கும்பலிடம், கடந்த ஜூலை 29-ம் தேதி மாமூல் தர மறுத்தார் பாலு என்கிற வியாபாரி. ஆத்திரமடைந்த ரெளடிகள் பாலுவின் முகத்தில் ஸ்பிரே அடித்து, அவரைக் கீழே தள்ளி, பட்டா கத்தியால் தலையில் கொடூரமாக வெட்டினார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய பாலு, வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்தக் கொடூர தாக்குதலை மற்ற வியாபாரிகளால் வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், வசூர் ராஜா மற்றும் ஜானி மீதான பயம்!

உதயா
உதயா

ரெளடிகளின் நடமாட்டங்களை நன்கறிந்த காவலர்கள் சிலர் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்... “வசூர் ராஜா கேங்கில் ஆரம்பத்திலிருந்தே அவன்கூடவே இருக்குறவன் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த உதயா. ஆளு பார்க்குறதுக்குதான் சப்பாணி மாதிரி ஒல்லியா இருப்பான். ஆனா, பயங்கர டேஞ்சர். அவனோட குரு வசூர் ராஜா மாதிரியே எதிரிகளோட தொண்டைக்குழியை கரகரன்னு அறுக்குறது இவனோட கொடூரமான ஸ்டைல். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்னு இவன் மேல 20-க்கும் அதிகமான வழக்குகள் இருக்குது. ரெண்டு வருஷம் முன்னாடி, எஸ்.ஐ ஒருத்தர் இவனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்காரு. அதுக்கு அவரைக் கடுமையா தாக்கி, ஓட விட்டிருக்கான். கிட்டத்தட்ட சைக்கோ இவன். பணம் தேவைப்பட்டா, ரோட்டுல போறவங்க மேல திடீர்னு பாய்ஞ்சு கையை முறுக்கி, கண்ட இடத்துல கடிச்சு, பணத்தைப் பிடுங்குவான். கஞ்சா போதையில் ஸ்கூல் புள்ளைங்க டிபன் பாக்ஸைப் பிடுங்கிச் சாப்பிடுவான். போன வாரம் ஜெயில்ல இருந்து வெளியே வந்தவனைப் பிடிச்சு, ‘மாவுக்கட்டு’ போட்டு வேற ஒரு கேஸ்ல ரிமாண்ட் பண்ணியிருக்கோம். இவன் தவிர ‘அறுப்பு’ ராமச்சந்திரன், ரவி, தாமு ஆகிய மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்” என்றார்கள்.

வசூர் ராஜா
வசூர் ராஜா

‘பெயர் வேண்டாம்’ என்றபடி பேசிய இன்ஸ்பெக்டர் ஒருவர், ‘‘வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 17 ரெளடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளோம். அதனால், அந்தப் பகுதிகளில் பெரிதாகப் பிரச்னை இல்லை. ஆனால், ஓல்டு டவுன் பகுதியிலிருந்துதான் புதிது புதிதாக ரெளடிகள் முளைத்துவருகிறார்கள். அவர்களில் பலரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் வசூர் ராஜாவின் பெயரைச் சொல்லித்தான் பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் ரெளடித்தனம் செய்கிறார்கள். இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினாலும், சொந்த ஜாமீனில் அனுப்பிவிடுகிறார்கள். கேட்டால், ‘கொரோனா காலகட்டத்தில் மைனர் குற்றவாளிகளை ரிமாண்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது’ என்கிறார்கள் நீதிபதிகள். இதனால் 15, 16 வயது சிறுவர்கள்கூட கத்தியுடன் திரிகிறார்கள். யோசிக்கத் தெரியாத வயது என்பதால், சட்டென்று கத்தியை எதிராளியின் வயிற்றில் சொருகிவிடுகிறார்கள். இதனால், வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் இருக்கிறார்கள்” என்றார் கவலையுடன்!

கேங்ஸ்டர்களாக மாறிய சிறுவர்கள்... அச்சத்தில் உறைந்த வேலூர் மக்கள்!

இதற்கிடையே, ‘சில்லறை வியாபாரிகளிடமும் மாமூல் கேட்டு மிரட்டுவதாக’ ரெளடி கெஜா என்கிற கிருஷ்ணமூர்த்தி மீதும், அவனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எஸ்.ஐ ஒருவர்மீதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் வியாபாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

“ரெளடிகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என்று வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானிடம் கேட்டோம். ‘‘முக்கியமான ரெளடிகளைச் சிறையில் அடைத்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் சில ரெளடிகளையும் கைதுசெய்துவருகிறோம். ரெளடிகளுக்கு போலீஸ் துணைபோவது தெரியவந்தால், அவர்கள்மீதும் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் சுருக்கமாக.

ஆல்பர்ட் ஜான்
ஆல்பர்ட் ஜான்

வேலூர் மாநகரம் ரெளடிகளின் கூடாரமாக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism