Published:Updated:

5 பெண்களோடு தங்கியிருந்த பிரபல ரவுடி! - மாவுக்கட்டு போட்ட வேலூர் போலீஸ்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி `வீச்சு' தினேஷ், நேற்றிரவு சிக்கினார். போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது தடுக்கி விழுந்ததால் ரவுடியின் கால் முறிந்தது. 

`வீச்சு' தினேஷ்
`வீச்சு' தினேஷ்

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் வீச்சு தினேஷ். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு கொடூரக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016-ம் ஆண்டு தன் கூட்டாளியான தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரைப் பாலாற்றில் உயிரோடு புதைத்துக் கொலை செய்த வழக்கிலும், சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தார்.

தினேஷ்
தினேஷ்

தவிர, தன் பிறந்தநாளை சக ரவுடி நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தினார். கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் `பாம்’ செல்வராஜ் என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் ரவுடி தினேஷ் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

செல்வராஜ் கொலை வழக்கில் ரவுடி தினேஷ் தலைமறைவானார். அவரின் கூட்டாளிகள் சிலரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரவுடி தினேஷை சத்துவாச்சாரி போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரவுடி தினேஷ் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ரவுடி வீச்சு தினேஷ் தடுக்கிவிழுந்தார். கால் முறிவு ஏற்பட்டதால் அவர் ‘அய்யோ... அம்மா’ என்று வலிதாங்க முடியாமல் கதறி அழுதார்.
காவல்துறை தகவல்

வாலாஜாபேட்டை போலீஸாருடன் கைகோத்த தனிப்படை போலீஸார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டில் 5 பெண்களுடன் ரவுடி தினேஷும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளியான செல்வராஜ் என்பவரும் இருந்தனர். போலீஸார் சுற்றிவளைத்தபோது கூட்டாளியுடன் தினேஷ் தப்பி ஓட முயன்றார்.

கரடு முரடான பாதையில் தப்பி ஓட முயன்ற ரவுடி தினேஷ் இருட்டில் வழி தெரியாமல் தடுக்கி விழுந்தார். இதில், அவரது வலது கால் பலமாக முறிந்தது. வலி தாங்க முடியாமல் கதறி அழுத ரவுடி தினேஷை மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் உடனடியாக மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

வீச்சு தினேஷ்
வீச்சு தினேஷ்

அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தவிர, வீட்டில் இருந்த 5 பெண்களும் கைதுசெய்யப்பட்டு வேலூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். வீட்டு உரிமையாளரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.