Published:Updated:

`துப்பாக்கிமுனையில் ரௌடி ஜானி கைது!’ - பெங்களூரில் மடக்கியது வேலூர் தனிப்படை

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

வேலூரை ஆட்டிப்படைத்துவந்த பிரபல ரௌடி ஜானியை தனிப்படை போலீஸார் அதிரடியாக கைதுசெய்திருக்கிறார்கள்.

காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜானி மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 45-க்கும் மேற்பட்ட கொடூர வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. `புகார் பதியப்படாத குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும்’ என்கிறது காவல்துறை. `என்கவுன்ட்டர்’ லிஸ்ட்டிலுள்ள ஜானி, பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் காரியங்களைக் கச்சிதமாக முடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

மனைவியுடன் ஜானி
மனைவியுடன் ஜானி

`இன்டர்நெட் போன் காலில் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி, லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்’ என்று விலாவரியாகச் சுட்டிக்காட்டும் காவல்துறை... ஜானி பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய துப்பு துலக்கிவந்தது. இந்த நிலையில், ரௌடி ஜானியைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து முடுக்கிவிட்டிருந்தார், எஸ்.பி செல்வகுமார்.

தமிழக-ஆந்திர வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய தனிப்படை போலீஸார் ஜானியின் மனைவி, உறவினர்கள், கூட்டாளிகள் எனப் பல தரப்பினரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரௌடி ஜானி பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு தனிப்படைகள் பெங்களூக்கு விரைந்தன.

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

ஜானிக்குக் கிடைக்கும் தகவலை திசைதிருப்புவதற்காக மூன்றாவது தனிப்படையை சித்தூர் பக்கம் திருப்பிவிட்டார் எஸ்.பி செல்வகுமார். சித்தூரில் தேடுதல் வேட்டை நடத்துவதுபோல் போக்குக் காட்டிய தனிப்படை போலீஸார், பெங்களூரில் பதுங்கியிருந்த ஜானியை துப்பாக்கிமுனையில் அதிரடியாகச் சுற்றிவளைத்தனர்.

ஜானியைக் கைதுசெய்து, ரகசிய இடத்தில்வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். அவரின் கூட்டாளிகளைப் பிடிக்கவும் தனிப்படை தீவிரம் காட்டிவருவதால், இது தொடர்பான கூடுதல் தகவல்களை நாளை கொடுப்பதாக வேலூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு