Published:Updated:

`கர்நாடகச் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை; ரகசியத் திருமணம்?’ வேலூர் திரும்பாத ரௌடி வசூர் ராஜா

மணக்கோலத்தில் வசூர் ராஜா
மணக்கோலத்தில் வசூர் ராஜா

வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி வசூர் ராஜா, ஓரிரு நாள்களுக்கு முன்னர் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் சொகுசு காரில் சென்ற ரௌடி கும்பல், 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. தமிழக ஊடகங்களில் அன்றைய `பிரேக்கிங்’ செய்தியான அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் மாடர்ன் கெட்டப்பில் இருந்தவர்தான் வசூர் ராஜா. வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த ராஜாமீது கொலை, கொள்ளை உட்பட 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏழு முறை குண்டர் சட்டமும் அவர்மீது பாய்ந்திருக்கிறது.

ரௌடி வசூர் ராஜா
ரௌடி வசூர் ராஜா

மதுரையில் சிக்கிய பின்னரே தமிழகம் முழுவதுமுள்ள ரௌடிகளுடன் வசூர் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. வசூர் ராஜாவுக்குக் காவல்துறையினரின் சப்போர்ட்டும், அரசியல் புள்ளிகளின் அரவணைப்பும் இருப்பதால் பெயருக்கு ஏற்ப வேலூரில் ராஜாவாகவே வலம்வந்தார். மதுரைச் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜாவை கர்நாடகா போலீஸார் பல்வேறு குற்றங்கள் தொடர்பாகக் கைதுசெய்து பெங்களூரு சிறையில் அடைத்திருந்தனர்.

சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் வேலூரிலுள்ள தொழிலதிபர்களையும் வணிகர்களையும் ராஜா மிரட்டி பணம் பறித்தார் என்று விவரிக்கிறது காவல்துறை. இந்த விவகாரம் தொடர்பாக, வசூர் ராஜாவின் கூட்டாளிகள் இரண்டு பேரை சத்துவாச்சாரி போலீஸார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்தனர். இந்த நிலையில், பெங்களூரு சிறையிலுள்ள வசூர் ராஜாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. வெளியில் வந்த அவர், மீண்டும் வேலூர் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

மணக்கோலத்தில் வசூர் ராஜா
மணக்கோலத்தில் வசூர் ராஜா

இந்தச் சூழலில், `மகன் வசூர் ராஜா இனியாவது திருந்தி வாழ வேண்டும்’ என்று ஆசைப்பட்ட அவரது தாயார் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்திருக்கிறார். அதன்படி, ராஜாவுக்கு ஏற்ற ஜோடியை தேடிப்பிடித்து ஓரிரு நாள்களுக்கு முன்னர் திருமணத்தையும் ரகசியமாக நடத்தி முடித்திருக்கிறார். இந்தத் திருமணம் பெங்களூருவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வேலூரில் வசிக்கும் உறவினர்கள் சிலரும் ராஜாவின் திருமணத்தில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டுவது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது என வேலூரையே நடுங்கவைத்துக்கொண்டிருந்த பிரபல ரௌடி ராஜா, `திருமணத்துக்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்கிறது வேலூர் காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு