Published:Updated:

நான் திருந்தவேமாட்டேன்... என்னை கொன்னுடுங்க!

- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன்
பிரீமியம் ஸ்டோரி
- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன்

- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன் அறிவழகன் பகீர்!

நான் திருந்தவேமாட்டேன்... என்னை கொன்னுடுங்க!

- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன் அறிவழகன் பகீர்!

Published:Updated:
- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன்
பிரீமியம் ஸ்டோரி
- ‘இரட்டைக் கதவு’ செக்ஸ் திருடன்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தான் அறிவழகன். அவன் குடியிருந்த பகுதிகளிலுள்ள வீடுகளில், முறையான குளியலறை வசதிகள் கிடையாது. கீற்றுத்தட்டிகளுக்குள் குளிக்கும் பெண்களை ஒளிந்திருந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறான். அதை வீடியோ எடுக்க ஆசைப்பட்டு, செல்போன் வாங்க நினைத்தவனுக்கு வீட்டில் பணம் கிடைக்கவில்லை. அப்போது ஆரம்பித்திருக்கிறது திருட்டுப் பழக்கம். ஒருவரிடமிருந்து செல்போனைத் திருடி அதில் வீடியோ எடுத்திருக்கிறான். தொடர்ந்து சிலமுறை இப்படிச் செய்தபோது ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பாவுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலை, நல்ல குடும்பம் என்ற செல்வாக்கால், ஊர்க்காரர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் எச்சரித்து விட்டுவிட்டார்கள். ‘தப்பு செய்து மாட்டிக்கொண்டாலும் தண்டனை இல்லாமல் தப்பித்து விடலாம்போல’ என்று நினைத்து அவன் ஆரம்பித்த அடுத்தடுத்த அத்தியாயங்கள் கொடூரமானவை!

தனியாக வசிக்கும் பெண்களே டார்கெட்!

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் படித்த காலத்திலும் அவனின் லீலைகள் தொடர்ந்திருக்கின்றன. எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலைக்காக பெங்களூருக்குச் சென்றவன், அங்கும் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த குற்றச்சாட்டில் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறான். சென்னைக்குத் திரும்பி வந்து, ஆவடியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்துவந்திருக்கிறான். அருகில் குடியிருக்கும் பெண்களிடம் ஸ்மார்ட்டாகப் பேசி, அன்பாகப் பழகி, அவர்களின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்வது; பிறகு அவர்களில், யார் கணவன் துணை இல்லாமல், தனியாக வசித்துவருகிறார்களோ அவர்களையே டார்கெட் செய்வது; அவர்களின் வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்து கத்தி முனையில் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது; அதை செல்போனில் வீடியோவாக எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டியே தன்னுடைய ஆசையை மறுபடி மறுபடி தீர்த்துக்கொள்வது; அவர்களிடம் பணம், நகைகளைக் கொள்ளையடிப்பது... இது அறிவழகனின் அன்றாடமாக மாறியிருக்கிறது. மற்றொருபுறம், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பணம், நகை, செல்போன்களைத் திருடுவதும் நடந்திருக்கிறது. இவனது திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள், அம்பத்தூர் காவல் சரகத்தில் புகார் கொடுக்க திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெண்கள் யாரும் பாலியல் தொடர்பாகப் புகாரளிக்கவில்லை.

நான் திருந்தவேமாட்டேன்... என்னை கொன்னுடுங்க!

பாலியல்ரீதியாகத் துன்புறுத்திவிட்டால், புகாரளிக்கப் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதைத் தனக்குச் சாதகமாகப் ‘புரிந்துகொண்ட’ அறிவழகன், தன் ஸ்டைலில் கொள்ளை, பாலியல் வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறான். வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த வேலு, 2018-ல் அறிவழகன் சம்பந்தப்பட்ட திருட்டு வழக்கை விசாரித்து அவனைக் கைதுசெய்தார். குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளையும் வேக வேகமாக முடித்து, 13 நாள்களில் அறிவழகனுக்குச் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார். குறைந்த நாள்களில் முடிக்கப்பட்ட அந்த வழக்கு, அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் மேல்முறையீடு செய்த அறிவழகன், சிறையிலிருந்து வெளியில் வந்துவிட்டான். அதன் பிறகும் அவன் குற்றச் செயல்கள் தொடர்ந்திருக்கின்றன; கைது நடவடிக்கைகளும் தொடர்ந்திருக்கின்றன. சிறையிலிருந்த அறிவழகன், கடந்த மே மாதம் ஜாமீனில் வெளிவந்தான்.

சிசிடிவி காட்சிக் குழப்பமும் இரட்டைக் கதவு சந்தேகமும்!

வடபழனியில் 21.7.2021-ம் தேதி, பக்தவத்சலம் தெரு, பிள்ளையார்கோயில் தெரு உட்பட மூன்று இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அறிவழகன் 40 கிராம் நகைகள், 20,000 பணத்துடன் தப்பினான். இது தொடர்பான புகாரை அடுத்து, உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் தணிகாசலம், சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தார். மூன்று வீடுகள் இருந்த தெருவிலும் ஒரே உடல்மொழியுடைய ஒருவன், வித்தியாசமான முறையில் நடந்து சென்றிருப்பதை கவனித்திருக்கிறார்கள். மூன்று வீடுகளும் இரட்டைக் கதவுள்ள வீடுகள். அறிவழகன் திருட்டு வழக்குகளில், அவன் திருடியதெல்லாமே இரட்டைக் கதவுள்ள வீடுகள்தான். எனவே, அவன் சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கிறான். ஆனால், அறிவழகனுக்குத் தலையில் முடி கிடையாது. சி.சி.டி.வி-யில் காணப்படும் நபருக்கு முடி இருக்கிறது. ஆனாலும், அறிவழகனை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். கழுத்தில் இரண்டு தங்கச் செயினுடன் கித்தாப்பாக வந்த அறிவழகனை விசாரித்தபோதுதான், அந்த மூன்று வீடுகளிலும் திருடியது அவன்தான் என்று தெரியவந்திருக்கிறது.

“பூட்டை உடைக்காம இரட்டைக் கதவுகளை ஈஸியாத் திறந்துடலாம்கிறதால அது மாதிரி வீடுகளை மட்டுமே குறிவெக்கிறது இவன் வழக்கம். அடையாளம் தெரியாமலிருக்க விக் மாட்டிக்கிட்டு திருடியிருக்கான். அதுகூடப் பரவாயில்லை... அந்த விடுகள்ல திருடின செயினைப் போட்டுக்கிட்டே விசாரணைக்கு வந்திருந்தான். 40 கிராம் நகைகள், 15,000 ரொக்கம் அவன்கிட்டருந்து மீட்டுருக்கோம். இதுபோக, பூந்தமல்லி ஏரியாவுலயும் கைவரிசை காட்டியிருக்கான். அதையும் விசாரிச்சுக் கிட்டிருக்கோம்” என்றார் நம்மிடம் பேசிய காவல் அதிகாரி.

நான் திருந்தவேமாட்டேன்... என்னை கொன்னுடுங்க!

அறிவழகன் குறித்த மேலதிக தகவல்களை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டோம். ``அறிவழகனுடன் பிறந்தவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவனின் சகோதரர் ஐடி நிறுவன ஊழியர். சகோதரி ஆசிரியை. ஆனால், அறிவழகனின் வாழ்க்கை இப்படி திசைமாறியதற்குப் பெண்கள் மீதான அளவுக்கு அதிகமான பாலியல் ‘வெறியே’ காரணம். பள்ளிப் படிப்பின்போதே வழி தவறியவன் அறிவழகன். இவனின் குற்றங்களை அறிந்து குடும்பத்தினர், உறவினர்கள் ஒதுக்கிய பிறகு இன்னும் உக்கிரமாகப் பாலியல் மற்றும் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான். பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் பெண்கள் திருட்டுப் புகார்கூடக் கொடுப்பதில்லை என்பது அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. முதலில் இவனை திருட்டுப் பயல் என்று மட்டுமே நினைத்திருந்தது காவல்துறை. வேளச்சேரி வழக்கில் விசாரித்தபோது, அறிவழகனின் செல்போனிலிருந்த ஆபாச வீடியோக்களைப் பார்த்தபோதுதான் அவனின் இன்னொரு கோர முகம் தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் வேலைக்கே செல்லாமல் திருட்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையே முழுநேரத் தொழிலாக அறிவழகன் மாற்றியிருக்கிறான். பெரும்பாலும் கணவன் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் பெண்களை மட்டும் டார்கெட் செய்திருக்கிறான். அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அந்தப் பெண்களின் செல்போனிலேயே அதை வீடியோ எடுத்து அதிலுள்ள கான்டாக்ட்களுக்கு அதை அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் விசாரணையில் அவனைக் காட்டிக் கொடுத்தன. வேளச்சேரி வழக்கையடுத்து, கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் அறிவழகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றைப் பதிவுசெய்திருக்கின்றனர். மற்றபடி, இப்போதும் அறிவழகன் மீது 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் மட்டுமே உள்ளன.

நான் திருந்தவேமாட்டேன்... என்னை கொன்னுடுங்க!

பாதாம், பிஸ்தா... பாலியல் சைக்கோ!

அறிவழகன் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அங்கு பாதாம், பிஸ்தா என ஆண்மையை அதிகரிக்கும் என்று நம்பப்படும் உணவுப் பொருள்கள் நிறைய இருந்தன. பணத்துக்காக அறிவழகன் திருட்டில் ஈடுபட்டாலும், பாலியல் வெறிதான் அவனின் முதன்மையான பிரச்னை. மது, சிகரெட் போன்ற பழக்கம் எதுவும் இல்லை. பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது ஒன்றே வாழ்க்கை என்று நம்புகிறான். அதுவும் அவர்களை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்வது அவனுக்கு ஒரு போதையாகவே மாறியிருக்கிறது. அதன் விளைவுதான் இத்தனையும். ஒரு செக்ஸ் சைக்கோவாகவே ஆகிவிட்டான்” என்றனர்.

விசாரணையின்போது அறிவழகனிடம் போலீஸ் உயரதிகாரி ஒருவர், “செக்ஸ் ஆசை அதிகமாக இருந்தால், திருமணம் செய்துகொண்டு வாழலாமே... இவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்வதற்கு பதில், பாலியல் தொழில் செய்யும் பெண்களையாவது நாடியிருக்கலாமே?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், “சாலையில் பெண்கள் நடந்து செல்வதைப் பார்த்தாலே அவர்கள்மீது எனக்கு வெறி வந்துவிடுகிறது... நான் திருந்தவே மாட்டேன். என்னைக் கொன்னுடுங்க” என்று கூறியிருக்கிறான்.

அறிவழகனின் இந்த வாக்குமூலத்தில், அவன் கடுமையாக உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அவனுக்குத் தண்டனையோடு உளவியல் சிகிச்சையும் தேவை. இல்லையெனில், எதிர்காலத்தில் விபரீதங்கள் தொடரலாம். பெண்கள், தங்களைப் பற்றிய தகவல்களை அறிமுகமற்ற, தேவையற்ற நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டால், தயங்காமல் புகார் கொடுக்க முன்வர வேண்டும்.

நமது அச்சம் குற்றவாளிகளை ஊக்குவிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism