Published:Updated:

வேலூர்: `இடிந்து விழுந்த வீடு; துடிதுடித்து உயிரிழந்த 9 பேர்!' - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

வீடு இடிந்த சம்பவத்தில், உயிரிழந்தோருக்குத் தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தொடர் கனமழை காரணமாக, கடந்த 14-ம்தேதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மலையிலிருந்து ராட்சதப் பாறை உருண்டு விழுந்ததில், அடிவாரத்தில் இருந்த ஒரு வீடு இடிந்து நொறுங்கியது. இந்தத் துயரச் சம்பவத்தில், வீட்டுக்குள் இருந்த தாய் ரமணி, மகள் நிஷாந்தி இருவரும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் நினைவுகளே அகலாத நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை வீடு இடிந்து ஒன்பது பேர் உயிரிழந்துள்ள சம்பவம், நெஞ்சை நொறுங்கச் செய்திருக்கிறது.

பேரணாம்பட்டு நகரம், அஜீஜியா தெருவைச் சேர்ந்தவர் அனீஷா பேகம். வயது 63. இவர் தனது பழைமையான வீட்டில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். வீட்டு மாடியில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்குத் தங்கியிருக்கிறார்கள். தொடர் கனமழையால், அப்பகுதியில் நான்கடி வரை தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், இன்று காலை 6:30 மணியளவில் அனீஷா பேகத்தின் வீடு திடீரென சரிந்து விழுந்து, தரைமட்டமானது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இடிபாடுகளில் சிக்கி அனீஷா பேகம், அவரின் மருமகள்கள் ரூகிநாஸ் (27), மிஸ்பா பாத்திமா (22), பேரன்கள் மன்னுல்லா (8), தாமீத் (2), பேத்திகள் அபிரா (4), அப்ரா (3), வாடகைக்குத் தங்கியிருந்த ஆசிரியைகள் கெளசர் (45), தன்ஷிலா (27) ஆகிய ஒன்பது பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்ததும் விரைந்துவந்த நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் இடுபாடுகள் அகற்றப்பட்டு நான்கு குழந்தைகள், ஐந்து பெண்கள் என மொத்தம் 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், வீடு இடிந்த சம்பவத்தில், உயிரிழந்தோருக்குத் தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு