Published:Updated:

வேலூர்: `15 ஆண்டு காதல்; திருமணம் செய்ய மறுக்கிறார்!’ - தி.மு.க புள்ளி மீது புகாரளித்த நர்ஸ்

சுதாகர்
சுதாகர்

‘15 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்தோம். இப்போது, திருமணம் செய்ய மறுக்கிறார்’ என்று தி.மு.க பிரமுகர் மீது நர்ஸ் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த அகரம் காலனியைச் சேர்ந்த சுதாகர் என்பவர் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் இளைஞர் அணித் துணை அமைப்பாளராக உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தேவி (33) என்ற பெண்ணும் 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. தேவி, சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார். இந்தநிலையில், தனக்காக இவ்வளவு காலம் காத்திருந்த காதலியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்று கூறி சுதாகர் விலகியதாகக் கூறப்படுகிறது.

தேவி
தேவி

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தேவி சமீபத்தில் சுதாகரின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த சுதாகர் தேவியை அடித்து வீட்டிலிருந்து வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய தேவி, ``எனக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும்தான் இருக்காங்க. நானும் சுதாகரும் சின்ன புள்ளையா இருக்கும் போதிலிருந்தே காதலிக்கிறோம். அவருக்காகத்தான் இத்தனை வருஷமா கல்யாணம் பண்ணிக்காம காத்துகிட்டு இருந்தேன்.

நாங்க காதலிக்கிற விவகாரம் எங்க ஊருக்கே தெரியும். இந்த நிலையில் அவருக்கு உறவினர் பெண்ணோட திருமணம் செய்ய நிச்சயம் பண்ணாங்க. அதுபற்றி தகவல் வந்ததுனால, சுதாகருடைய வீட்டுக்கே போய் நியாயம் கேட்டேன். அவர் என்ன அடிச்சு வெளியில் தள்ளிட்டாரு. `போடி... எங்க வேணாலும் போய் கம்ப்ளைன்ட் கொடு. நான், தி.மு.க-வுல பதவியில் இருக்கேன். என்ன எதுவும் செய்ய முடியாது’னு சொல்லி கொலை மிரட்டல் விடுத்தாரு. அப்புறம் ஊர் பஞ்சாயத்துல முறையிட்டேன். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மூத்த நிர்வாகிகள் கிட்டேயும் புகார் சொன்னேன்.

நானும் தேவியும் காதலிச்சது உண்மைதான். ஆனா, ஓர் கட்சி பிரமுகருடன் தேவி நட்பு வைத்துள்ளார். அது எனக்குப் பிடிக்கல.
தி.மு.க புள்ளி சுதாகர்

யாருக்கும் சுதாகர் பணிந்து போகல. கறாரா பேசுறாரு. நான் அவர்கூட வாழணும். அதுக்காகத்தான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். என் கம்ப்ளைன்ட்டுக்கு எதிரா போலியாக ஓர் புகாரையும் அவர் அத்தை மகள்களை வைத்து வேப்பங்குப்பம் போலீஸ்ல கொடுத்திருக்கிறாரு சுதாகர். அந்தப் புகார் மனுவுல, அந்தப் பொண்ணுங்க குளிக்கும்போது என் தம்பி எட்டிப் பார்த்ததா சொல்லி நடக்காத சம்பவத்தைச் சொல்லியிருக்காங்க. என் வாழ்க்கைக்கு ஓர் நீதி வேணும்’’ என்றார் குமுறலாக.

புகார் குறித்து தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகரிடம் பேசினோம். ``எனக்கு வயசு 33 ஆகுது. நான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவன். அரசியல் ஆர்வத்தால் 10 ஆண்டுகளுக்கு முன் வேலைய விட்டுட்டு ஊருக்கு வந்துவிட்டேன். நானும் தேவியும் காதலிச்சது உண்மைதான். ஆனா, ஓர் கட்சி பிரமுகருடன் தேவி நட்பு வைத்துள்ளார். அது எனக்குப் பிடிக்கல. அதனால கடந்த 5 வருஷத்துக்கு முன்னாடியில் இருந்தே தேவி கிட்ட பேசுறது கிடையாது. காதலும் பிரேக்-அப் ஆயிடுச்சு.

சுதாகர்
சுதாகர்

இந்தச் சூழல்ல, எங்க குடும்பத்துக்கும் தேவி குடும்பத்துக்கும் இடத் தகராறு இருக்கு. இந்தப் பிரச்னையை மையமாக வச்சிகிட்டு, நாங்க இன்னும் காதலிக்கிறோம்னு பொய் சொல்லிட்டு சுத்துறா அந்தப் பொண்ணு. எனக்கு உறவினர் பொண்ணுகூட நடக்கவிருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்திட்டாள். இதுக்குப் பின்னாடி அந்தப் பிரமுகரும் அவர் சார்ந்திருக்க கட்சியின் தலையீடும் இருக்கிறது. என் அத்தை பொண்ணுங்க கொடுத்த கம்ப்ளைன்ட் குறித்து எனக்குத் தகவல் தெரியாது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு