Published:Updated:

புது சூட்கேஸ்... புத்தம்புது கரன்ஸி... தொழிலதிபர்களுக்கு கந்து வட்டி...

லஞ்சத்தில் திளைத்த பன்னீர்செல்வம்!
பிரீமியம் ஸ்டோரி
News
லஞ்சத்தில் திளைத்த பன்னீர்செல்வம்!

லஞ்சத்தில் திளைத்த பன்னீர்செல்வம்!

லாக்கரைத் திறக்கத் திறக்க, கட்டுக்கட்டாகப் பணம்... நகைக்கடையைப்போல கொத்துக் கொத்தாகத் தங்க நகைகள்... அலமாரி முழுவதும் வெள்ளிப் பொருள்கள்... பினாமி பெயர்களில் மாநிலம் முழுவதும் நிலங்கள்... என வாணியம்பாடி மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் தோண்டத் தோண்ட பூதம் கிளம்பியதுபோல் சொத்துகளின் பட்டியல் வந்துகொண்டேயிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திவரும் ஆய்வில், சுமார் நூறு கோடியை எட்டியிருக்கும் இவரது சொத்து மதிப்பு இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் 51 வயதுடைய பன்னீர்செல்வம். இவரது கட்டுப்பாட்டின்கீழ் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் நீர்வளம், காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளைக் கண்காணித்து வகைப்படுத்துவது, விதிமீறும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுப்பது, புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான அனுமதிச் சான்றிதழ் தருவது... என பல்வேறு பணிகளுக்கு இவரிடம்தான் ‘அப்ரூவல்’ பெற முடியும். இந்தப் பணிகளுக்கான கோப்புகளில் ஒரு கையெழுத்துப் போடுவதற்காகவே பல லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெறுவதாக பன்னீர்செல்வம்மீது புகார்கள் குவிந்தன.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் பன்னீர்செல்வத்தை ரகசியமாகக் கண்காணித்தனர். லஞ்சம் வாங்குவதற்காகவே அவர், காட்பாடி காந்தி நகரிலுள்ள முனிசிபல் காலனியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து, தனி அலுவலகமாக நடத்திவந்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்தது. அக்டோபர் 13-ம் தேதி மாலை, பன்னீர்செல்வம் அந்தத் தனி அலுவலகத்துக்குள் சென்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் ரொக்கப் பணம், முறைகேடாகப் பணம் பெற்றதற்கான 11 ஆவணங்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, ராணிப்பேட்டை பாரதி நகரிலுள்ள பன்னீர்செல்வத்தின் சொந்த பங்களா வீட்டிலிருந்தும் 3,25,20,000 ரூபாய் ரொக்கப் பணம், மூன்றரை கிலோ தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்தனர். இவை தவிர, லஞ்ச ஒழிப்புத்துறையினரே மலைக்கும் அளவுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புடைய 60-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திரங்களும் சிக்கின. வங்கிக் கணக்கு விவரங்களையும் சேகரித்து லாக்கரில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி, பன்னீர்செல்வத்தின் வட்டித் தொழில்தான் போலீஸாரையே மலைக்க வைத்திருக்கிறது. ராணிப்பேட்டை சிப்காட்டிலுள்ள சிறிய தொழிற்சாலைகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் பல கோடி ரூபாயைக் கந்து வட்டிக்கு விட்டிருக்கிறார். தவணை தவறும் பட்சத்தில் வட்டிக்கு வட்டி வசூலித்திருக்கிறார். வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்துகளையும் இவர் வளைத்திருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதற்கிடையே, பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

புது சூட்கேஸ்... புத்தம்புது கரன்ஸி... தொழிலதிபர்களுக்கு கந்து வட்டி...

இந்த ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகேயுள்ள அத்திமாஞ்சேரி கிராமம். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள்கள் இருவருக்கும் தடபுடலாகத் திருமணம் செய்துவைத்திருக்கிறார். ஒரு மகள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதன்படி, துறைரீதியான வாணியம்பாடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றிவந்த பன்னீர்செல்வம், ஒன்றரை ஆண்டுக்கு முன்னர்தான் மண்டல இணை தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். தான் வாங்குவது மட்டுமன்றி, தனக்குக் கீழிருக்கும் அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க வைத்திருக்கிறார்.

மாதத்துக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அலுவலர்களை வரவழைத்து, அவர்களிடமிருந்து சூட்கேஸில் பணத்தைப் பெற்றுக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நம்பர் லாக் கொண்ட புது சூட்கேஸில், புது நோட்டாக கரன்ஸி வர வேண்டும் என்பது இவர் விதிக்கும் கண்டிஷனாம். சூட்கேஸைத் திறந்து கரன்ஸியை முகர்ந்து பார்ப்பது இவருக்குப் பிடித்தமான ஒன்று என்கிறார்கள் இவரது அலுவலக ஊழியர்கள். ஆண்டுக்கு 300, 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிற்சாலைகள் அள்ளி வீசும் கோடிக்கணக்கான ரூபாயை வாங்கிக்கொண்டு விதிமீறலைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்.

இதுவரை எத்தனை கோப்புகளில் அவர் கையெழுத்துப் போட்டிருக்கிறார், எந்தெந்தப் பணிகளுக்காகச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார், இன்னும் எங்கெங்கே சொத்துகள் இருக்கின்றன, மகள் அமெரிக்காவில் இருப்பதால் வெளிநாட்டில் முதலீடுகள் செய்திருக்கிறாரா ஆகிய தகவல்களைச் சேகரித்துவருகிறோம். இதுவரை கணக்கெடுத்திருக்கும் சொத்துகளின் மதிப்பே நூறு கோடியை எட்டுகிறது. முழுமையாகக் கணக்கெடுத்தால் அது இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்” என்றார்கள். இதற்கிடையே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வகையில் அரசு ஊழியரான இவரை வருமான வரித்துறையும் விரைவில் விசாரிக்கவிருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் இருக்கும்பட்சத்தில் அமலாக்கத்துறையும் இந்த வழக்கைக் கையிலெடுக்கலாம்.

லஞ்சம் வாங்கி நீர்நிலைகளையும் இயற்கையையும் அழித்துவிட்டு, பசியெடுத்தால் பணக்கட்டுகளையா சாப்பிடுவீர்கள் பன்னீர்செல்வம்?