Published:Updated:

சென்னை: போதையில் தகராறு! - கத்தி எடுத்த வியாபாரிக்கு நண்பர்களால் நேர்ந்த சோகம்

கொலை
கொலை ( Representational Image )

சென்னை, தி.நகரில் பிளாட்பாரத்தில் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கடலை வியாபாரி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை, சைதாப்பேட்டை நடைபாதையில் குடியிருந்தவர் நாராயணன் (38). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்துவந்தார். இவர் தி.நகர் நியூபோக் சாலையில் கழுத்தில் குத்துக் காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நாராயணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் விசாரணையில் நாராயணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் அவரைக் கொலை செய்தது யாரென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

சென்னை:`லால் கூப்பிடுகிறான்; ஏதோ வேலை இருக்கிறது!' - கஞ்சா மோதலில் நடந்த கொலை
கொலை
கொலை
Representational Image

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நாராயணனும் இன்னும் சிலரும் மது அருந்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சம்பவத்தன்று நாராயணனுடன் யாரெல்லாம் சேர்ந்து மது அருந்தினார்கள் என்ற விவரத்தை போலீஸார் சேகரித்தனர். அப்போது அவர்கள் நாராயணின் நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்களில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நாராயணன், அன்றைய தினம் வியாபாரத்துக்குச் செல்லவில்லை. அதனால் தி.நகர் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார். அப்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுவிட்டோம். நாராயண மூர்த்தியுடன் சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த நாகராஜன், காமேஷ், சஞ்சய், பாலாஜி, ரவி ஆகியோர் மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது மதுபோதையில் நாராயண மூர்த்தி நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆத்திரத்தில் நாராயணமூர்த்தி மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியிருக்கிறார்.

கொலை
கொலை
representational image

இதனால் ஆத்திரமடைந்த ரவி, நாகராஜன், சஞ்சய், பாலாஜி, காமேஷ் ஆகியோர் சேர்ந்து நாராயணமூர்த்தி வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி அவரைக் கழுத்தில் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த வழக்கில் நாகராஜன், பாலாஜி, சஞ்சய், காமேஷ் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம். ரவி என்பவர் மட்டும் தலைமறைவாக இருக்கிறார். நாகராஜன் மீது கொலை வழக்கு இருக்கிறது" என்றனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கொலைச் சம்பவங்கள் சென்னையில் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்ன்ர், கஞ்சா மோதலில் திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தி.நகர் பகுதியில் இந்தக் கொலை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு