Published:Updated:

மதுரை: லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறை! - லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டரின் விபரீத முடிவு?

 விபரீத முடிவு
விபரீத முடிவு

`தமிழகத்திலயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதன்முறை’ என்று பரவிய செய்தியால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருமாள் பாண்டியன்
பெருமாள் பாண்டியன்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் பாண்டியன், எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்து, தேனி மாவட்டத்தில் பணியாற்றிவந்தார். அப்போது சில புகார்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்று, 2010-ல் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.

அந்தக் காலகட்டத்தில் மேலூர் அரசு சித்த மருத்துவர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவித்த புகாரை விசாரித்தவர், மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யாமலிருக்க 7 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு, அதில் முன்பணமாக 1,20,000 பெற்றபோது, அவர் துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான வழக்கு 10 வருடங்கள் நடந்துவந்தது. 10 வருடங்கள் பணியில் இல்லாமல் மனச்சோர்வுடன் இருந்துவந்திருக்கிறார் பெருமாள் பாண்டியன். இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

 தற்கொலை
தற்கொலை
Representational Image

இந்தநிலையில்தான் இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என்பதால் அவர் உடனே சிறை செல்லவில்லை. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

`தமிழகத்திலயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர், லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதன்முறை’ என்று பரவிய செய்திகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மதுரை: லஞ்சம் வாங்கிய வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்குச் சிறை! - நீதிமன்றம்  அதிரடி

மதுரை தத்தனேரியில் வசிக்கும் பெருமாள் பாண்டியன், நேற்று மகன் வெளியே சென்றிருந்த நேரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரான மனைவி உமா மீனாட்சியை சுத்தியலால் தாக்கிக் கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய மூத்த மகன் சுந்தர், வீட்டுக்கு வந்தபோது பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், பின்பக்க வாசல் வழியாகச் சென்று பார்த்தபோது தாய் கொலை செய்யப்பட்டும், தந்தை தற்கொலை செய்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியாகி அலறினார்.

 விபரீத முடிவு
விபரீத முடிவு

அதன் பிறகு செல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் வந்து விசாரித்தனர். `பெருமாள் பாண்டியன் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், குடிப்பழக்கத்துக்கும் ஆளாகி மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது’ என்கிறார்கள் காவல்துறையினர். வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகிறார்கள்.

இந்தச் சம்பவம் செல்லூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு