Published:Updated:

சென்னை: குடும்பப் பிரச்னை; லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்! - விஜிலென்ஸில் சிக்கியது எப்படி?

இன்ஸ்பெக்டர் அனுராதா

சென்னையில் பெண் இன்ஸ்பெக்டர் அனுராதா என்பவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை: குடும்பப் பிரச்னை; லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்! - விஜிலென்ஸில் சிக்கியது எப்படி?

சென்னையில் பெண் இன்ஸ்பெக்டர் அனுராதா என்பவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
இன்ஸ்பெக்டர் அனுராதா

கோவையைச் சேர்ந்தவர் மோனிகா ஸ்ரீ. இவருக்கும் கொளத்தூரைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பேசிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று மோனிகா ஸ்ரீயை அவரின் கணவர் வினோத்குமார் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் டாக்டர் வினோத்குமார் உட்பட எட்டுப் பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த நிலையில், தன்னுடைய உடைமைகளை எடுக்க மோனிகா ஸ்ரீ, கொளத்தூரிலுள்ள வினோத்குமாரின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் தன்னிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் சென்ற மோனிகா ஸ்ரீ உடமைகளை எடுத்திருக்கிறார். அப்போது கணவர் குடும்பத்தினருக்கும், மோனிகா ஸ்ரீ குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வினோத்குமார், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ மீது புகாரளித்தார். அந்தப் புகாரை விசாரித்த போலீஸார், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் மோனிகா ஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வினோத்குமார் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வரதட்சணைக் கொடுமை வழக்கோடு, இந்தப் புகாரையும் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், டாக்டர் வினோத்குமார் கொடுத்த புகார் தொடர்பாக மோனிகா ஸ்ரீயிடம் விசாரணை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் அனுராதா, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் பேரம் பேசி 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் அனுராதாவைச் சிக்கவைக்க மோனிகா ஸ்ரீ திட்டமிட்டார். அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விவரத்தைக் கூறினார். அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கொடுத்த அறிவுரையின்படி மோனிகா ஸ்ரீ 20 ஆயிரம் ரூபாயை இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டர் அனுராதாவைக் கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வசமாகச் சிக்கிய இன்ஸ்பெக்டர் அனுராதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

கைது
கைது

யார் இந்த இன்ஸ்பெக்டர் அனுராதா என போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``இன்ஸ்பெக்டர் அனுராதா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு ரிப்போர்ட்டுகள் சென்றன. இந்தச் சமயத்தில்தான், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தார். அந்தப் புகாரின்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்தித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் மீது குற்றம்சாட்டினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அனுராதாவுக்கே தெரியாமல் கல்லூரி மாணவியின் புகாரரை கொளத்தூர் துணை கமிஷனர் ரஜாராமை விசாரிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து கல்லூரி மாணவியின் புகார் ரகசியமாக விசாரிக்கப்பட்டது. அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டிகள் அடிப்படையில், அவர்மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைச் சிறையில் அடைத்தனர். இந்தத் தகவல் இன்ஸ்பெக்டர் அனுராதாவுக்குத் தெரியாமல் சீக்ரெட்டாக போலீஸ் உயரதிகாரிகள் நடத்தினர். இது ஒரு உதாரணம்தான். இதைப்போல இன்ஸ்பெக்டர் அனுராதா மீது இன்னும் சில சர்ச்சைகள் உள்ளன" என்றனர்.