Published:Updated:

ஈரோடு: கட்டுக்கட்டாகத் தூக்கி வீசப்பட்ட லஞ்சப் பணம்... ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்!

கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணம்
News
கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணம்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டுக்கு வந்ததைப் பார்த்தும் உடனே அதிகாரிகள் கட்டுக் கட்டாக லஞ்சப் பணத்தை எடுத்து அலுவலகத்துக்கு வெளியே வீசியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3-வது மாடியில் செயல்பட்டுவருகிறது `ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்.’ ஈரோடு மாவட்டத்திலுள்ள 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 15 பேரூராட்சிகள் என மொத்தம் 57 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் அனைத்தையும் இந்த அலுவலகம்தான் மேற்கொள்கிறது. இந்நிலையில் பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக தார்ச்சாலைகள் அமைப்பதற்கான திட்டம் மற்றும் ஆய்வுப் பணிகள் சமீபத்தில் நடந்துவந்திருக்கின்றன. இதற்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

ரெய்டு நடைபெற்ற பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம்
ரெய்டு நடைபெற்ற பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம்

அதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரகசியமாக மஃப்டியில் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சாலை விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நடந்திருக்கிறது. இதில் பெருமளவு பணம் கைமாறுவது தெரிந்ததும், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் ரெய்டில் இறங்கியுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டுக்கு வந்ததைப் பார்த்ததும் அலுவலகத்திலிருந்த அதிகாரிகள் பயந்துபோய், கட்டுக்கட்டாக இருந்த லஞ்சப் பணத்தை எடுத்து அலுவலகத்துக்கு வெளியே வீசியுள்ளனர். அதைக் கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தொடர்ந்து அந்த அலுவலகம் முழுக்கச் சோதனையிட்டுள்ளனர்.

ரெய்டு நடைபெற்ற அலுவலகம்
ரெய்டு நடைபெற்ற அலுவலகம்

அதில் அலுவலகத்திலிருந்த உதவி செயற்பொறியாளர்களின் மேஜைக்கு அடியிலும், பீரோக்களிலும் கட்டுக்கட்டாகப் பணம் இருந்திருக்கிறது. நேற்றிரவு 10 மணி வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.51.32 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

``லஞ்ச விவகாரம் குறித்து மூன்று நாள்களுக்கு முன்பே தகவல் சொல்லப்பட்டது. அதனடிப்படையில் சரியான நேரம் பார்த்து ரெய்டு நடத்தி, லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் யாரெல்லாம் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திட்டப்பணிகளை ஒதுக்கும் வகையில் செயல்பாடுகள் நடந்துவந்திருக்கின்றன. தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுவருகிறது’’ என்றனர் விஷயமறிந்தவர்கள்.