Published:Updated:

சென்னை: `கவர்களில் சீக்ரெட் எழுத்துகள்’ - விஜிலென்ஸிடம் சிக்கிய மாவட்டப் பதிவாளர் மீனாகுமாரி

தென்சென்னை மாவட்டப் பதிவாளராக இருக்கும் மீனாகுமாரியிடமிருந்து விஜிலென்ஸ் போலீஸார் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவற்றில் ரகசிய கோடு வார்த்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நந்தனத்தில் ஒருங்கிணைந்த வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த அலுவலகத்தில் தென்சென்னை மாவட்டப் பதிவாளர் நிர்வாக அலுவலகமும் உள்ளது. இங்கு மாவட்டப் பதிவாளராக மீனாகுமாரி என்பவர் இருக்கிறார். கடந்த 19-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமசந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி தங்கராஜ், மூர்த்தி, தலைமைக் காவலவர் வெங்கடேசன், காவலர் கல்யாணி ஆகியோர் கொண்ட டீம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் 3,95,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்டப் பதிவாளர் மீனாகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

``தென்சென்னை மாவட்டப் பதிவாளர் மீனாகுமாரி அலுவலகத்தில் கடந்த 19.11.2021-ம் தேதி மாலை 6:45 மணி முதல் 7:30 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் புளு கலர் துணி பையில் 3,61,000 ரூபாய் சில கவர்களில் வைக்கப்பட்டிருந்தன. மீனாகுமாரியின் ஹேண்ட் பேக்கிலிருந்து 3,000 ரூபாயும், அவர் பயன்படுத்தும் அலுவலக வாகனத்தில் ஒரு கவரில் 25,000 ரூபாயும், இன்னொரு கவரில் 3,000 ரூபாயும் இருந்தன. மேலும் வாகனத்தில் Dash board-ல் 7,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கவர் ஒன்றில் தி.நகர் என கறுப்பு நிற பேனாவால் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு கவரில் 50 என்று கறுப்புநிற பேனாவால் எழுதப்பட்டிருந்தது. பெரிய கவர் ஒன்றில் விருகம்பாக்கம் 50, ஏஐஜி என எழுதப்பட்டிருந்தது. காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கவரில் 25 என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு கவரில் j4 25 என எழுதப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`லஞ்சப்புகார்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு!'
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

தொடர்ந்து மாவட்டப் பதிவாளர் மீனாகுமாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் முகப்பேரிலுள்ள மீனாகுமாரியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, அங்கிருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு