Published:Updated:

`குப்பைத்தொட்டி, வாளி மண்ணில் பணம் புதைப்பு!' - வேலூர் பத்திரப்பதிவு ரெய்டில் அதிர்ந்த விஜிலென்ஸ்

வேலூர் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.3,56,000 ரொக்கப் பணம் சிக்கியது. இதுதொடர்பாக, இணை சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் வேலப்பாடியில், மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. மாவட்டப் பதிவாளர் நிலையில் இணை சார் பதிவாளராகச் சிவலிங்கம் என்பவர் உள்ளார். இங்கு பத்திரப் பதிவு மற்றும் சங்கங்கள் பதிவு உட்பட அனைத்து வகையான பணிகளுக்கும் இடைத்தரகர்களின் மூலம் பல ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் லஞ்சமாகப் பெறுவதாக புகார் எழுந்தது.

இணை சார் பதிவாளர் சிவலிங்கம்
இணை சார் பதிவாளர் சிவலிங்கம்

அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தேவநாதன் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் உட்பட 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென நேற்று மாலை வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் சென்றனர். யாரும் வெளியே செல்லாதபடி அனைத்துக் கதவுகளையும் அடைத்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

இணை சார் பதிவாளர் சிவலிங்கம் மேசையில் இருந்த ரூ.42,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். அந்தப் பணத்துக்கு இணை பதிவாளர் கணக்குக் காட்டவில்லை. தவிர அங்கிருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் எனப் பலரிடமிருந்தும் கட்டுக் கட்டாகப் பணம் சிக்கியது. மூலை முடுக்கெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கிளறிப் பார்த்தனர்.

சோதனையில் சிக்கிய பணம்
சோதனையில் சிக்கிய பணம்

சோதனையின்போது, பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் தங்களிடமிருந்த பணத்தை மேசைக்கு அடியிலும் குப்பைத் தொட்டியிலும் வீசி எறிந்தனர். ஒரு சிலர், அங்கு தொங்கவிடப்பட்டிருந்த தீயணைப்பு வாளியில் இருந்த மண்ணுக்குள் பணத்தைப் பதுக்கி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் கமுக்கமாக அமர்ந்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் பணத்தையெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சல்லடை போட்டு தேடிக் கைப்பற்றினர். மொத்தம், ரூ.3,56,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிலங்கள், வீடுகள் பதிவுசெய்ய வந்தவர்களில் சிலரிடமும் பணம் சிக்கியது. உரிய ஆவணங்களைக் காண்பித்து அவர்கள் பணத்தைப் பெற்றுச் சென்றனர்.

சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.  
சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.  

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``இணை சார் பதிவாளர் சிவலிங்கம் மீது ஏற்கெனவே பல்வேறு லஞ்சப் புகார்கள் உள்ளன. அதனடிப்படையில்தான் சோதனை நடத்தினோம். அவரிடம் நேற்றிரவு முதல் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது’’ என்றார். இந்தச் சம்பவம், பத்திரப் பதிவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு