Published:Updated:

வேலூர்: கணவர் செய்த முறைகேடு! - டி.ஐ.ஜி வீட்டில் அதிரடிகாட்டிய விஜிலென்ஸ்

சிறைத்துறை டி.ஐ.ஜி குடியிருப்பு
சிறைத்துறை டி.ஐ.ஜி குடியிருப்பு

சென்னை டாஸ்மாக் மேலாளர் மீதான முறைகேடுப் புகார் தொடர்பாக மேலாளரின் மனைவியும், வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி-யுமான ஜெயபாரதியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலுள்ள டாஸ்மாக் மற்றும் எலைட் மதுபானக் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அதிக வசூலாகும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று இரவு கடையை மூடும் நேரத்தில் சென்னை அமைந்தகரை, வேளச்சேரி, அயனாவரம், எழும்பூர் ஆகிய இடங்களிலுள்ள மதுக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஏற்கெனவே, தீபாவளியை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எஸ்.எம்.முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முருகனின் அலுவலகம் மற்றும் சென்னை வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது. டாஸ்மாக் மேலாளர் முருகனின் மனைவி ஜெயபாரதி வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருக்கிறார். மனைவியைப் பார்ப்பதற்காக அடிக்கடி வேலூர் வரும் முருகன், மத்தியச் சிறைக்கு அருகிலிருக்கும் அரசுக் குடியிருப்பில் தங்குவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி
சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி

இதனால், `முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்ட பணம் மனைவியின் அதிகார பாதுகாப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா?’ என்பதைக் கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் டி.ஐ.ஜி குடியிருப்பிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கும், டி.ஐ.ஜி-க்கும் சம்பந்தமில்லை என்றாலும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிகாட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியது.

சோதனையில், முறைகேடு தொடர்பாக டி.ஐ.ஜி வீட்டிலிருந்து எந்த விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு