Published:Updated:

தீபாவளி வசூல்... எங்கு எவ்வளவு சிக்கியது? #bribe

இந்தச் சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத 19 லட்சத்து 80 ஆயிரத்து 105 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக, சென்னை அம்பத்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 4,67,300 ரூபாயும், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2,24, 080 ரூபாயும் சிக்கியது.

லஞ்சம் தவிர்
லஞ்சம் தவிர் ( விகடன் )

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 19.80 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது. உண்மையிலேயே, இது மட்டும்தான் லஞ்சத் தொகையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

money
money

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின்போது, மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை தீபாவளி இனாம் என்ற பெயரில் அன்பளிப்பு பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி, முக்கியத் துறைகளான தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் என பணப் புழக்கம் அதிகம் உள்ள அலுவலகங்களில் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்கள், ஏஜென்டுகள் எனப் பலரும் தீபாவளி இனாம் வழங்கிவருகின்றனர்.

இதில் பணமாக மட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருள்கள், வெடிகள், ஆடைகள் எனப் பல வகையிலும் தீபாவளி இனாம் என்ற பெயரில் லஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அளிக்கப்படும் இனாம் மூலம் ஒப்பந்தக்காரர்கள், ஏஜென்டுகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் அதிகாரிகளிடம் சலுகை பெறுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

லஞ்சம் - கீழக்கரை நகராட்சி
லஞ்சம் - கீழக்கரை நகராட்சி
உ.பாண்டி

இதைக் கட்டுப்படுத்த, ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீபாவளிப் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பாக திடீர் சோனைகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆண்டு, கடந்த 23, 24 என இரு நாள்களில், அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகம், உயர் நீதிமன்ற வளாக மாவட்ட தீ அணைப்பு அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், கீழக்கரை நகராட்சி அலுவலகம், மதுரை டாஸ்மாக் கடை, உத்தமபாளையம் வாகன ஆய்வாளர் அலுவலகம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவெரும்பூர் சார் பதிவாளர் அலுவலகம், உத்தமபாளையம் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளிட்ட, மாநிலம் முழுவதும் உள்ள 17 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத 19 லட்சத்து 80 ஆயிரத்து 105 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக, சென்னை அம்பத்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 4,67,300 ரூபாயும், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2,24, 080 ரூபாயும், திருவெரும்பூம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1.67 லட்சமும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட தீ அணைப்பு அலுவலகத்தில் 1.60 லட்சமும், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் 1,45,440 ரூபாயும், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1,05,950 ரூபாயும் சிக்கியது.

லஞ்சம் - சிக்கிய பண ம் குறித்த பட்டியல்
லஞ்சம் - சிக்கிய பண ம் குறித்த பட்டியல்
உ.பாண்டி

மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்களில், வெறும் 17 இடங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடத்தி, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கைப்பற்றியிருப்பது என்பது பெயரளவிற்கு நடத்தப்பட்ட ஒன்றாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். வரும் காலங்களிலாவது இதுபோன்ற விழாக் காலங்களில் விரிவான சோதனைகள் மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.