Published:Updated:

சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

சையது ரியாஸ்தீன்
சையது ரியாஸ்தீன்

சீர்காழியில் கோலமிட வந்த ஆசிரியர் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சீர்காழியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் கோலமிட வந்த ஆசிரியரின் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால், அந்தப் பெண்மணி அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 பிருந்தா
பிருந்தா

நாகை மாவட்டம், சீர்காழி திருவள்ளுவர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியரான ஆனந்த ஜோதி. இவரின் மனைவி சித்ரா (வயது 49). கடந்த 18-ம் தேதி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். தனிப்படை போலீஸார் அக்கம்பக்கத்திலிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகள் மற்றும் தொலைபேசித் தொடர்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினார்கள். இதில், சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பிருந்தா (வயது 27) என்பவருடன், சட்டநாதபுரம் கணபதி நகரைச் சேர்ந்தவரும், விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகியுமான சையது ரியாசுதீன் (வயது 29) அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. நேற்றிரவு சையது ரியாசுதீனையும் பிருந்தாவையும் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சையது ரியாசுதீன் சித்ராவை இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிருந்தா. கடந்த 2014 -ம் ஆண்டு, சீர்காழியில் கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சிபெற வந்தபோது அவருக்கும், சையது ரியாசுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு பிருந்தாவுக்கும் அரியலூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. சையது ரியாசுதீனும், பிருந்தாவின் தந்தை குணசேகரனும் சேர்ந்து கட்டுமானப் பொருடள்கள் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள்.

விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி சையது ரியாசுதீன்
விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி சையது ரியாசுதீன்

இந்தநிலையில், திருமணமாகி ஐந்து மாதங்களில் பிருந்தாவின் கணவர் செல்வகுமார் சிங்கப்பூரில் பணிக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து பிருந்தா, சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு வீடு பிடித்துக் குடியேறியிருக்கிறார். இங்கு வந்த பிறகு பிருந்தாவுக்கும், சையது ரியாசுதீனுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பது மட்டுமன்றி, நேரில் சந்தித்தும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். இதைக் கண்ட சித்ரா, அவர்களைக் கண்டித்ததுடன் சையது ரியாசுதீன், பிருந்தா வீட்டுக்கு வருவதைத் தடை செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சையது ரியாசுதீன், தனக்கு இடையூறாக இருந்த சித்ராவைக் கொலைசெய்யத் திட்டமிட்டு, இரண்டு முறை ஒத்திகை பார்த்திருக்கிறார். கடந்த 18-ம் தேதி, அதிகாலை 3:30 மணி முதல் சித்ராவின் வீட்டு அருகே காத்திருந்து, 4:25 மணிக்கு இரும்பு பைப்பால் சித்ராவை அடித்துக் கொலை செய்திருக்கிறார். தற்போது, சையது ரியாசுதீனையும் பிருந்தாவையும் கைதுசெய்திருக்கிறோம். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பு பைப் மற்றும் டூவீலரைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு