Published:Updated:

`ஆர்தர் ரோடு சிறை; சிபிஐ அலுவலகம்!’ - மும்பை அழைத்துவரப்படும் விஜய் மல்லையா

விஜய் மல்லையா
விஜய் மல்லையா ( AP )

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்பட இருக்கிறார்.

மதுபான ஆலை, விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்திவரும் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன்பெற்றுவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றார். இங்கிலாந்தில் வசித்து வந்த அவரை, இந்தியா கொண்டு வர சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் முயற்சி செய்துவந்தன.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது. இதுதொடர்பான வழக்கில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் மட்டுமல்லாது இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் வரையில் விஜய் மல்லையா தொடர்ச்சியாக வழக்கு நடத்தினார். ஆனால், அவரது தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள், அவருக்கு எதிராகவே தீர்ப்பளித்தன. விஜய் மல்லையா, இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது கடைசி வாய்ப்பான மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கடந்த மே 14-ம் தேதி நிராகரித்திருந்தது.

Vikatan

இந்தநிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணிகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அவர் மீது 17 வங்கிகள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அவரை மும்பை அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கின்றன. பகல் நேரத்தில் அவர் மும்பை அழைத்துவரப்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிபிஐ கஸ்டடியில் எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர், விசாரணை நடத்த அமலாக்கத் துறை தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை அவர் இரவு நேரத்தில் மும்பையில் தரையிறங்கினால், சிபிஐ அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அவருக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணை அமைப்புகள் சார்பில் ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறை வளாகம் குறித்த வீடியோவையும் அந்த அமைப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன. ஆர்தர் ரோடு சிறையில் உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும் இரண்டு மாடிக் கட்டடத்தில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப், பிரபல தாதா சோட்டா ராஜன், அபு சலீம், பீட்டர் முகர்ஜி மற்றும் 13,500 கோடி பி.என்.பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விபுல் அம்பானி உள்ளிட்டோரும் இந்தச் சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு