Published:Updated:

போயஸ் கார்டன் முகவரி; நடமாடும் நகைக்கடை; வி.வி.ஐ.பி நெருக்கம்! - `வில்லங்க' வில்லிவாக்கம் கர்ணன்

வில்லிவாக்கம், ராஜமங்கலம் பகுதியில் நடமாடும் நகைக்கடை போல வலம் வந்த தி.மு.க பிரமுகர் முத்துவேல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Muthuvel
Muthuvel

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் நிக்கில் கண்ணா. இவர், வில்லிவாக்கம் பகுதியில் குடியிருந்துவருகிறார். கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். தன்னுடைய தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டார் நிக்கில் கண்ணா. அதற்கு அவருக்கு 100 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அப்போதுதான் வில்லிவாக்கம், ராஜமங்கலத்தில் குடியிருக்கும் தி.மு.க பிரமுகர் முத்துவேல் என்பவரை போயஸ் கார்டனில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது 100 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முத்துவேலிடம் கூறியுள்ளார்.

பணத்தை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய முத்துவேல், அதற்கு கமிஷனாக 2.62 கோடி ரூபாய் கேட்டுள்ளார். அதற்குச் சம்மதித்த நிக்கில் கண்ணா, வங்கி மூலம் கமிஷன் தொகையை முத்துவேலுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், 100 கோடி ரூபாயை முத்துவேல் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. பலதடவை கேட்டும் பணத்தைக் கொடுக்காததால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நிக்கில் கண்ணா புகார் கொடுத்தார்.

Muthuvel
Muthuvel

அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் கௌதமன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீஸார் தி.மு.க பிரமுகர் முத்துவேலைத் தேடிவந்தனர். ஆனால், அவர் குறித்த தகவல்கள் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், முத்துவேலுக்குக் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தநாள். அதையொட்டி வில்லிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் `வில்லிவாக்கம் கர்ணன்' என்ற அடைமொழியுடன் அவரின் ஆதரவாளர்கள் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். தன்னுடைய வீட்டில் முத்துவேல் பிரமாண்டமாகப் பிறந்தநாளைக் கொண்டாடும் தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. உடனடியாக அன்றைய தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முத்துவேலைத் தேடிச் சென்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப்பிறகு முத்துவேலை சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். இதையடுத்து, நிக்கில் கண்ணாவை ஏமாற்றியதற்காக முத்துவேலை நேற்று போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அவரின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUTHUVEL
MUTHUVEL

சென்னை மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் அருகில் உள்ள பகுதியில்தான் முத்துவேலின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை செலுத்திவருகிறார். மேலும், அலுவலகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து முத்துவேல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன. அந்த அலுவலகத்தில்தான் முத்துவேலை நிக்கில் கண்ணா சந்தித்துப் பேசியுள்ளார். அவரது பேச்சை நம்பி கமிஷன் தொகையைக் கொடுத்துள்ளார்.

முத்துவேலுக்கு காவல்துறை மட்டுமல்லாமல் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் நண்பர்களாக உள்ளனர். இதனால் முத்துவேல் தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போதுதான் அவர், பிறந்தநாள் கொண்டாட வீட்டுக்கு வரும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரிடம் நிக்கில் கண்ணா புகார் தொடர்பாக விசாரித்தோம். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் முத்துவேலைக் கைது செய்துள்ளோம். முத்துவேல் எப்போதும் கழுத்தில் ஒரு கிலோ எடையுள்ள தங்க செயின்களையும் கைகளில் கைச் செயின், மோதிரங்களை அணிந்திருப்பார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோசடி செய்த வழக்கில் வடசென்னையைச் சேர்ந்த `நடமாடும் நகைக்கடை' என்று அழைக்கப்பட்ட ஆதிகேசவன் கைது செய்யப்பட்டார். அவரைப்போலவே முத்துவேலும் நடமாடும் நகைக்கடையாகவே வலம் வந்துள்ளார். மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பொது சேவைகளுக்குத் தாராளமாக நன்கொடைகளை கொடுத்துவந்துள்ளார். இதனால்தான் அவரை வில்லிவாக்கம் கர்ணன் என்று அவரின் ஆதரவாளர்கள் வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டிவந்துள்ளனர். முத்துவேல் மீது 420, 409 (நம்பிக்கை மோசடி) 120 b, (கூட்டுச்சதி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்துள்ளோம்" என்றார்.

போயஸ் கார்டன் அலுவலகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து முத்துவேல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன.
போலீஸ் உயரதிகாரி

முத்துவேலுவின் வீடு முழுவதும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் வெளியில் எப்போதும் அவரின் ஆதரவாளர்கள் இருப்பார்கள். ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்துவேலுவின் வீடு அமைந்துள்ளது. இதனால் போலீஸ் ரோந்து வாகனத்தையும் முத்துவேலுவின் வீட்டின் அருகில் அடிக்கடி பார்க்கலாம். ரியல் எஸ்டேட், புரோமோட்டர்ஸ் என பல தொழில்களைச் செய்த முத்துவேல் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்துள்ளார். அவரிடம் ஏராளமான சிம்கார்டுகள், விலை உயர்ந்த ஆடி கார், வால்வோ, பென்ஸ், இனோவா, பார்ச்சூனர் என கார்கள் உள்ளன. அவர் வீட்டிலிருந்து காரில் வெளியில் செல்லும்போது கான்வாய் போல கார்கள் அணிவகுத்துச் செல்லும். முத்துவேல் கைது செய்யப்பட்ட தகவலையடுத்து அவருக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறை அதிகாரிகள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.