Published:Updated:

சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் வன்முறை; போலிச் சாமியார் உட்பட 3 பேர் போக்சோவில் கைது!

போக்சோவில் கைதான மூன்று பேர்
News
போக்சோவில் கைதான மூன்று பேர்

செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரைக்கொண்டு கண்காணித்து, சிறுமி அடைத்துவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேற்று சென்றிருக்கின்றனர் திண்டிவனம் மகளிர் காவல்துறையினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 13-ம் தேதி தன் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தன் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கடந்த 15-ம் தேதி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிந்த மகளிர் காவல்துறையினர், விசாரணையைத் தொடங்கியபோது, சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது.

சிறுமி கடத்தலில் தொடர்புடைய மூவர்
சிறுமி கடத்தலில் தொடர்புடைய மூவர்

சிறுமியின் மொபைல்போன் சிக்னலை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்தபோது, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. அதையடுத்து, சிறுமி செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் கண்காணித்திருக்கின்றனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரை அடுத்த புவனேஸ்வரி நகர் பகிதியில் சிறுமியின் செல்போன் சிக்னல் காட்டியிருக்கிறது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற திண்டிவனம் மகளிர் காவல்துறையினர், அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். இந்தக் குற்றச் செயலில், சம்பந்தப்பட்ட போலிச் சாமியார் ஒருவர் உட்பட மூன்று நபர்களைக் கைதுசெய்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. கடந்த 13-ம் தேதி வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்ற சிறுமி, கீழ் ஆதனூர் பகுதியில் தனியாக நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த போலிச் சாமியார் எல்லப்பன் என்பவர், ஆட்டோவை நிறுத்தி சிறுமியை வலுக்கட்டாயமாக உள்ளே ஏற்றியிருக்கிறார். சிறுமி தான் திண்டிவனத்தில் இறங்க வேண்டும் என அவரிடம் கூறியிருக்கிறார். அதன்படி திண்டிவனத்தில் நிறுத்துவதாகக் கூறிவிட்டு, மதுராந்தகம் பகுதிக்குக் கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர், மதுராந்தகத்தை அடுத்த சிறுபேர்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (எ) அப்பு (33) வீட்டில் சிறுமியை அடைத்துவைத்து பாலியல் வன்முறையில் இறங்கியிருக்கிறார் எல்லப்பன். இந்த நிலையில்தான், தங்கள் மகளைக் காணவில்லை எனச் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

சிறுமிக்குப் பாலியல் கொடுமை
சிறுமிக்குப் பாலியல் கொடுமை
சித்தரிப்புப் படம்

சிறுமியை ஆட்டோ டிரைவர் பிரபுவின் வீட்டில் சுமார் ஐந்து நாள்கள் அடைத்துவைத்து பாலியல் தொந்தரவு அளித்துவந்த போலிச் சாமியார் எல்லப்பன், போலீஸார் சிறுமியைத் தேடுவதை அறிந்து, செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் வசித்துவரும் சின்னப்பையன் (53) என்பவரது ஆட்டுக் கொட்டகையில் அடைத்துவைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்திருக்கிறார். இந்த நிலையில், செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரைக்கொண்டு கண்காணித்து, சிறுமி அடைத்துவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேற்று சென்றிருக்கின்றனர் திண்டிவனம் மகளிர் காவல்துறையினர்.

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டதோடு, போலிச் சாமியார் எல்லப்பன், அவருக்கு உடந்தையாக இருந்த சின்னப்பையன், ஆட்டோ டிரைவர் பிரபு ஆகியோரைக் கைதுசெய்தனர். IPC-ல் நான்கு பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழும், மொத்தம் எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், மூன்று பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் துணைச் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.