Published:Updated:

`ஆள்மாறாட்டத்தால் நடந்ததா?' - விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேனேஜருக்கு நேர்ந்த கொடூரம்

விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாலர் கொலை
விழுப்புரம் பெட்ரோல் பங்க் மேலாலர் கொலை

பட்டப்பகலில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் பங்க் மேலாளர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் கிழக்கு, பாண்டி ரோடு கம்பன் நகர் பகுதியில், பிரகாஷ் என்பருக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணப்பாக்கத்தைச் சேர்ந்த சீனுவாசன் (56) என்பவர் மேலாளராகப் பணியாற்றிவந்தார். வேலை விழுப்புரத்தில் என்பதால், சீனுவாசன் தனது குடும்பத்துடன் கம்பன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை வழக்கம்போல அவர் வேலையில் மூழ்கியிருந்தபோது, பெட்ரோல் பங்கின் முன் ஒரு கார் வந்து நின்ற நிலையில், அதனருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அதிலிருந்து இறங்கிய சிலர், பெட்ரோல் போடும் இடத்திலிருந்த இளைஞர்களிடம் விரைவாக பெட்ரோல் போடும்படி கூறி தகராறு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சீனுவாசன்
கொலை செய்யப்பட்ட சீனுவாசன்

பணியாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் அங்கிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களில் ஒருவர், நேராக மேலாளர் அறைக்குச் சென்றார். அங்கு, கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்த சீனுவாசன் மீது தொடர்ந்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்.

பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த நாட்டு வெடிகுண்டுகள் சீனுவாசன் உடலை சிதைத்தன. இருக்கையிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சீனுவாசனை, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தார் அந்த இளைஞர். இதையடுத்து அவர், காரில் ஏறி தப்பிச்சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் அதேபோல தப்பியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ந்துபோன ஊழியர்கள், உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு
வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு

அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட சீனுவாசனின் சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்த அறையில் தடயங்களைச் சேகரித்த அவர்கள், வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர். அதேபோல அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றினர். கொலையாளி வந்து கொலை செய்துவிட்டு வெளியேறும் காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருப்பதாகத் தெரிவித்த காவல்துறை, விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு, விழுப்புரம் சண்முகபுரம் காலனியைச் சேர்ந்த ரவுடி அசார், இந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பிரகாஷிடம் 25 லட்சம் ரூபாய் மாமூலாகக் கேட்டு மிரட்டியிருக்கிறார். பிரகாஷ் பணம் தர மறுத்ததால், அவரை கொலை செய்யும் நோக்கதுடன் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார். ஆனால், பிரகாஷின் வீடு அடையாளம் தெரியாமல் பொற்செழியன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசினார் அசார். இந்தச் சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

சீனுவாசன்
சீனுவாசன்

பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், அசார் உள்ளிட்ட மூவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான அசார் மட்டும் அப்போது தலைமறைவானார்.

தற்போதுவரை தலைமறைவாக இருக்கும் அவர், முன் விரோதம் காரணமாகத் தற்போது கூலிப்படை மூலம் பிரகாஷைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம். அவர்கள் பிரகாஷ் என நினைத்து சீனுவாசனைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது காவல்துறை. அதேபோல, ``சீனுவாசன் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், நான் அந்த அறையில் இருந்து வெளியே சென்றேன். பெட்ரோல் பங்கில் நான் இருக்கும் தகவலை உறுதிப்படுத்திய பின்புதான் கொலையாளிகள் வந்துள்ளனர்.

விழுப்புரம் பெட்ரோல் பங்க்
விழுப்புரம் பெட்ரோல் பங்க்

என்னை அடையாளம் தெரியாமல், அவர்கள் சீனுவாசனைக் கொலை செய்திருக்கலாம்” என்று காவல்துறை அதிகாரிகளிடம் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் பிரகாஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் சாதாரணமாக நடந்திருக்கும் இந்தப் படுக்கொலைச் சம்பவம், விழுப்புரம் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு