திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமார் (49), முத்துக்குமரன் (46) இருவரும் இணைந்து, கடந்த 24.05.2014 முதல் 23.05.2019 வரை திருவண்ணாமலை காந்திநகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் (அப்போது விழுப்புரம் மாவட்டம்) சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜீனத் (38) உட்பட 296 நபர்களிடம் ரூ.52.19 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு இவர்கள் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் ஜீனத். புகாரைப் பெற்ற விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 08.01.2020 அன்று நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த புகார் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணையில் இருந்துவந்த நிலையில், விழுப்புரம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி முருகனின் உத்தரவின்பேரில், கடந்த 2-ம் தேதி சிவக்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், சென்னையிலுள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.