Published:Updated:

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு; மன உளைச்சலில் இளைஞர் எடுத்த துயர முடிவு!

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

``கடன் வாங்கி விளையாடி, அதிக காசுகளை இழந்துவிட்டதாகவும், வருமானமே இல்லாத சூழலில் கஷ்டப்பட்டு வந்ததாகவும், இந்நிலையில் இவ்வாறு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி கூறுகிறார்."

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது சேர்ந்தனூர். இந்தக் கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் பச்சையப்பன். இவருக்குத் திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதுவை அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து ஆன்லைனில் பணத்தைக் கட்டி ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துவந்துள்ளது. தன் பணம் மட்டுமின்றி சிலரிடம் கடன் பெற்றும் இந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த விளையாட்டில் அதிக அளவிலான பணத்தை இவர் இழந்ததாக சொல்லப்படுகிறது.

இறந்த நிலையில் பச்சையப்பன்
இறந்த நிலையில் பச்சையப்பன்
ஆன்லைன் ரம்மி விளையாடப் போறீங்களா? உங்க கவனத்துக்கு சில `சம்பவங்கள்'

பண இழப்பிலிருந்து மீளமுடியாமல் மன உளைச்சலில் இருந்த பச்சையப்பன்னுக்கு மது அருந்தும் பழக்கமும் அதிகரித்துள்ளது. மனவேதனை அதிகரித்துவந்த சூழலில், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பணத்தை இழந்ததாக கூறி, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வளவனூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளரிடம் பேசினோம். ``நீண்ட நாட்களுக்குமுன் ஆன்லைன் மூலம் அவர் ரம்மி விளையாடியுள்ளார். அதற்காக கடன் வாங்கி விளையாடி, அதிக காசுகளை இழந்துவிட்டதாகவும், வருமானமே இல்லாத சூழலில் கஷ்டப்பட்டு வந்ததாகவும், இந்நிலையில் இவ்வாறு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி கூறுகிறார்.

அவர் பயன்படுத்தி வந்த போனை, அவரே உடைத்தெறிந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த இறப்பு தொடர்பாக, 174-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவர், ரம்மி விளையாடி பணம் இழந்ததாக அவர் மனைவி கூறிய புகாரையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

Death (Representational image)
Death (Representational image)
'ஆன்லைன் ரம்மி வழக்கில் தப்பாட்டம் ஆடியது யார்?' - முட்டிமோதும் 'அதிமுக - திமுக' பின்னணி அரசியல்

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அ.தி.மு.க ஆட்சியின்போது ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக ஒரு அவசரத் தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடுத்திருந்தன. வழக்கின் விசாரணை முடிவில், ``தடைச்சட்டம் என்பது பொத்தம் பொதுவாக இருக்கக்கூடாது. உரிய விதிமுறைகளுடன் இயற்றப்பட வேண்டும். அப்படி புதிதாக சட்டம் இயற்ற அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, ஆன்லைன் விளையாட்டிற்கு எதிரான தற்போதைய தடைச் சட்டத்தை நீக்குகிறோம்" என இரண்டு வாரங்களுக்குமுன் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு