Published:Updated:

`உழைச்ச பணம்யா அது... எப்படி விட முடியும்?' -வழிப்பறித் திருடர்களை விரட்டிய விழுப்புரம் மூதாட்டி

வழிப்பறி
வழிப்பறி

வழிப்பறித் திருடர்களிடமிருந்து தனது பணத்தைப் போராடி மீட்ட விழுப்புரம் மூதாட்டிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துநர் கண்ணன். இவரது மனைவி பெண்ணரசி வட்டார விரிவாக்கக் கல்வியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக விழுப்புரம் நேருஜி வீதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை

மதியம் 1 மணியளவில் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.32 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு ஷேர் ஆட்டோவில் ஏறி, அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றார். அப்போது வங்கியின் முன்பு நின்றுகொண்டு பெண்ணரசியை நோட்டம் விட்ட இரண்டு மர்ம நபர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர்.

சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வெளியே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே இறங்கிய பெண்ணரசி அருகில் உள்ள கடையில் ஏதோ பொருள் வாங்கச் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் அவரை நெருங்கினர். உடனே பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் பெண்ணரசியின் கையில் இருந்த பணப்பையைப் பிடித்து இழுத்தார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர், “பையை விடுடா… விடுடா..” என்று கூச்சலிட்டுக்கொண்டே பணப்பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவர்களின் பின்னாலேயே ஓடினார்.

பெண்ணரசி
பெண்ணரசி

மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த நிலையிலும் அவர்களிடம் கடுமையாகப் போராடினார் பெண்ணரசி. ஒருகட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலும் பணப்பையை அவரிடமிருந்து பறிக்க முடியாமலும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், பெண்ணரசி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

பெண்ணரசியிடம் பேசினோம். ``இருவேல்பட்டில் வட்டார விரிவாக்கக் கல்வியாளராக இருந்த நான் 2015-ல் ஓய்வு பெற்றேன். சம்பவம் நடந்த அன்றைக்கு அந்த வங்கியில் என்னுடைய பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு, திருவெண்ணெய்நல்லூர் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் பஸ் ஸ்டாண்ட் வந்தேன். எனக்கு மூட்டு வலி இருந்ததால பிரண்டை ஊறுகாய் வாங்கலாம்னு ரோட்டோரம் இருந்த கடைக்குப் போனேன்யா. அந்த நேரத்துலதான் அவங்க ரெண்டுபேரும் வந்து பணப்பையை எங்கிட்ட இருந்து புடுங்க முயற்சி செஞ்சாங்க. உழைச்ச பணம்யா.. எப்படி விட முடியும்..? பையின் கைப்பிடி அவங்ககிட்ட மாட்டிக்கிச்சி. ஆனாலும் என் பலம் முழுக்க வெச்சி பையை இறுக்கமா புடிச்சிக்கிட்டேன். ரோட்டோட இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் வரைக்கும் அவங்கக்கிட்ட போராடிக்கிட்டே ஓடினேன். அதுக்கப்புறம்தான் பையை எங்கிட்டயே விட்டுட்டு அவங்க தப்பிச்சி ஓடிட்டாங்க” என்றார்.

மூதாட்டி பெண்ணரசியின் குடும்பத்தினருடன் எஸ்.பி ஜெயக்குமார்
மூதாட்டி பெண்ணரசியின் குடும்பத்தினருடன் எஸ்.பி ஜெயக்குமார்

இந்தச் சம்பவத்தையடுத்து மூதாட்டி பெண்ணரசியை நேரில் அழைத்து, அவரது வீரத்தைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய அவர், “உண்மையிலேயே அவர் வீரப் பெண்மணிதான். அவர்களிடம் கடைசிவரை போராடி தனது வீரத்தை நிரூபித்திருக்கிறார். வங்கிக்குப் பணம் எடுக்கச் செல்லும் முதியவர்கள் கண்டிப்பாக உடன் யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல பணத்தை எடுத்துவிட்டு வங்கியின் வளாகத்திலும் வெளியேயும் எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அந்த நேரத்தில் யாராவது சந்தேகப்படும்படி தங்களை கவனிக்கிறார்களா என்பதைக் கவனித்து, தேவைப்பட்டால் அருகிலிருக்கும் காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல வங்கியில் பெரும் தொகையை எடுத்துக்கொண்டு கடைகளுக்கோ அல்லது டாஸ்மாக் போன்ற இடங்களுக்கோ செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு