Published:Updated:

``நான் சாமியார் அல்ல, ஆனால்..!'' - வைரல் அன்னபூரணி

அன்னபூரணி
News
அன்னபூரணி

சமூக வலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்ட அன்னபூரணி, இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

`அம்மாவின் திவ்ய தரிசனம், உலக மக்களைக் காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்துவிட்டாள். வாருங்கள் பக்த கோடிகளே!' என்ற வாசகத்துடன்கூடிய நோட்டீஸ் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல, அந்தப் பெண் சாமியாரின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவந்தன.

யார் இவர் என செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் விசாரித்தபோது அவர் பெயர் அன்னபூரணி என்பது தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னபூரணி ஆசி வழங்கவருவதாகக் கூறிய நிகழ்ச்சிக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில இந்து அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றன.

அன்னபூரணி சாமியார்
அன்னபூரணி சாமியார்

இந்தச் சூழலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு எளிமையாக காரில் வந்திறங்கினார் சாமியார் அன்னபூரணி அரசு. அவர், கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

``நான் இயற்கை ஒலி(ளி) என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்து, ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளும் நடத்திவருகிறேன். கடந்த 19.12.2021-ம் தேதி செங்கல்பட்டு வாசுகி மஹாலில் ஆன்மிகப் பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, நல்ல முறையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து என்னையும் என் ஆன்மிக சேவைகளையும் தவறாகச் சித்திரித்து வதந்திகள் பரப்பப்பட்டன. மேலும் என் கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம் எனவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சிலர் தவறாக வதந்தி பரப்புகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எந்தவித முகாந்தரமும் இல்லாமல் தொடர்ந்து என்மீதும், என் ஆன்மிக சேவை மீதும், எனது சீடர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். இது எனது நற்பெயருக்குக் களங்களம் ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நபர்கள் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள். `நீ ஆன்மிக சேவையில் ஈடுபடக் கூடாது!' என்றும், மீறிச் செயல்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் மிரட்டல் விடப்படுகிறது. மேலும் என் சீடர்கள் உயிருக்கும் எந்த நேரமும் அச்சுறுத்தலும், ஆபத்தும் இருந்துவருகிறது. எனவே மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், என் சீடர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனு
புகார் மனு

புகாரளித்த பிறகு அன்னபூரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக என்மீது அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து புகார் அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன். மேலும், போலிச் சாமியார் என என்னைப் பற்றி பேசிப்வருபவர்கள், என்னை உணராதவர்கள். நான் ஆன்மிகப் பணி செய்வதற்காக மட்டுமே வந்திருக்கிறேன். வெறும் வீடியோக்களைப் பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே என்னைப் பற்றித் தெரியும். என்னை சாமியார், கடவுளின் அவதாரம் என நான் ஒருபோதும் கூறவில்லை. ஆன்மிக வழியில் என்னை உணர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு தங்கள் உணர்வை வெளிப்படுத்திவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்மிகம் என்றால் என்ன... கடவுள் என்றால் என்ன... எந்த சக்தி அனைவரையும் இயக்குகிறது என்பதை உணர்த்தும் ஆன்மிகப் பயிற்சிகளை வழங்கும் ஆன்மிக சேவையை மட்டுமே நான் வழங்கிவருகிறேன். செய்திகளில் பரவுவதுபோல் நான் எந்த அருள்வாக்கும் தரவில்லை. மேலும், ஆன்மிகப் பணியைத்தான் தொடர்ந்து செய்வேன். இறுதியில் சத்தியம்தான் ஜெயிக்கும், தர்மமேதான் நிலைக்கும்" என்றார்.

அன்னபூரணி
அன்னபூரணி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பக்தர்களுக்கு ஆசி கொடுக்கும் அன்னபூரணி என்பவரின் வீடியோக்கள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டன. அதன் பிறகுதான் அவர் குறித்த விவரங்கள் காவல்துறைக்குத் தெரியவந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த அன்னபூரணியின் ஆசி வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே புகார்கள் வந்தன. தற்போது அன்னபூரணி கொடுத்துள்ள புகாரில், அவருக்கும் அவரின் சீடர்களுக்கும் மிரட்டல்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சில செல்போன் நம்பர்களையும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.