விருதுநகர்: `ரூ.25 லட்சம்; 117 சவரன் நகைகள் பறிமுதல்!’ - 2 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

விருதுநகரில் மேற்கொண்ட சோதனையில் ரூ.25,66,870 பணமும், 117 சவரன் தங்கநகைகளும் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணைக்குப் பிறகு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி, ஒரே நாளில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்ளிலும், வாகன சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்திலுள்ள 18 சோதனைச் சாவடிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இதில், 17 சோதனைச் சாவடிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் கட்டுப்பாட்டிலும், ஒரு சோதனைச் சாவடி போலீஸாரின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.34,17,935 கைப்பற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள தலைக்குந்தா சோதனைச்சாவடியில் மட்டும் பணம் ஏதும் சிக்கவில்லை. விருதுநகரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கருப்பையா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் - மதுரை சாலையில் சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு கார்கள் மதுரையை நோக்கி வேகமாகச் சென்றன. இரண்டு கார்களையும் மடக்கினர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார். முதல் காரில் விருதுநகர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, தன் கணவர் ராஜாவுடன் இருந்தார்.
``என்னோட மகளும், என்னோட மாமியார் வீட்ல தங்கியிருக்கிறதால நகைகளுக்குப் பாதுகாப்பு இருக்காதுன்னு இங்கே எடுத்துட்டு வந்துட்டேன்” என போலீஸாரிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நகைகள் அவருடையதுதான் என்பதற்கு ஆதாரம் எதையும் காட்ட முடியவில்லையாம். அத்துடன், அதில் சில நகைகள் புத்தம் புதியதாக இருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. `மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் நீங்கள் மாவட்டம் தாண்டி வந்ததது ஏன்?’ என்ற கேள்விக்கு, `காரை சர்வீஸுக்கு எடுத்து வந்தேன்’ என மழுப்பலாகப் பதில் சொலியிருக்கிறார். இதையடுத்து, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள சுண்டமேட்டூர் அண்ணாநகரிலுள்ள கலைச்செல்விக்குச் சொந்தமான இரண்டு வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர் போலீஸார்.

அங்கு, வேறு பணம், நகைகள் எவையாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா என நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர். சில ஆவணங்களைத் தவிர வேறெதுவும் சிக்கவில்லை. இதேபோல, நாமக்கல் அருகேயுள்ள நல்லிபாளையத்திலுள்ள மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரான சண்முக ஆனந்தின் வீட்டிலும் சோதனை நடத்தினர். அதில் ரூ.6,46,000 பணம், 30 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கல்வியில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்றுவரும் விருதுநகர், தற்போது கணக்கில் வராத பணப் பறிமுதலிலும் முதலிடம் பெற்றிருக்கிறது.