Published:Updated:

ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

ராமசுப்பு
பிரீமியம் ஸ்டோரி
ராமசுப்பு

அதுல கடும் கோபமான ராமசுப்பு, ‘இவனை அடிச்சுக் கொல்லுங்கடா’னு சொன்னார்.

ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

அதுல கடும் கோபமான ராமசுப்பு, ‘இவனை அடிச்சுக் கொல்லுங்கடா’னு சொன்னார்.

Published:Updated:
ராமசுப்பு
பிரீமியம் ஸ்டோரி
ராமசுப்பு

ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலத்தில் எடுக்கும் சம்பவங்கள், தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சில ஊர்களில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மாதிரி வாக்கெடுப்புகூட நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலைசெய்து சட்டவிரோதமாக நடக்கும் இப்படியான ஏல விவகாரத்தில், இப்போது ஓர் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.

ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இதற்கான தலைவர் பதவியைக் குறிவைத்திருக்கும் அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமசுப்பு, ‘போட்டியின்றி தன்னைத் தேர்வுசெய்ய வேண்டும். யாரும் எதிர்த்துப் போட்டியிடக் கூடாது’ என்று ஊர்க்கூட்டத்தில் வற்புறுத்தியிருக்கிறார். அப்போது, ‘அதெல்லாம் முடியாது. தேர்தல் நடத்தியாக வேண்டும்’ என்று ஏல முறைக்கு எதிராகப் பேசியிருக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார். அதைத் தொடர்ந்து நடந்த அடிதடியில் சதீஷ்குமார் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய சதீஷ்குமாரின் சகோதரி ஹேமலதா, “எங்க குடும்பத்துக்கு ஆதாரமா இருந்தவன் சதீஷ்தான். தனியார் வங்கியில வேலைபார்த்தான். ஊர் நலன்ல அக்கறை செலுத்துவான். கோயில் திருவிழாவுலயிருந்து எந்தப் பொதுக்காரியம்னாலும் தப்பு நடந்துடக் கூடாதுனு சொல்வான். தப்பு நடந்தால் தைரியமா கேள்வி கேட்பான். அன்னைக்கு நைட் 10 மணிக்கு, தேர்தல் சம்பந்தமா ஊர்க்கூட்டம் போட்டாங்க. சதீஷ், இன்னொரு தம்பி வினோத், அம்மா, அப்பா நாலு பேரும் கூட்டத்துக்குப் போயிருந்தாங்க. அவங்க நிறைய பேர் இருந்ததால எங்க அப்பா, அம்மா, தம்பி மூணு பேரால சமாளிக்க முடியலை. பெத்தவங்க கண்ணு முன்னாடியே கதறக்கதற அடிச்சிருக்காங்க. இதுல என் தம்பி படுகாயமடைஞ்சான். சதீஷை நாங்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோறதுக்குள்ள அவன் இறந்துட்டான்” என்று சொல்லி அழுதார்.

வினோத், ஹேமலதா
வினோத், ஹேமலதா

சம்பவத்தின்போது அங்கு இருந்த சதீஷ்குமாரின் சகோதரர் வினோத், “ராமசுப்புவின் உறவினர் செல்வராஜ்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அப்போ, `தேர்தல்ல ஊராட்சித் தலைவர் பதவிக்கு எனக்கு எதிரா யாரும் போட்டியிடக் கூடாது’னு ராமசுப்பு சொன்னார். அதுக்கு, ‘நீங்க வேட்புமனுத் தாக்கல் செஞ்சுட்டு வந்து சொல்றீங்க. ஊர்க்காரங்ககிட்ட முன்னாடியே கேட்டீங்களா?’னு என் அண்ணன் கேட்டார். அதோடு, ‘நீங்க தலைவரா வந்தா ஊருக்கு என்ன செய்வீங்க?’னும் கேட்டார். அதுல அவங்க ரொம்பவே ஆத்திரமாயிட்டாங்க. அவங்க பதில் ஏதும் சொல்லாததால, ‘தேர்தலை நடத்தி, அதுல மக்கள் யாரைத் தேர்தெடுக்கிறாங்களோ அவங்களே தலைவரா வரட்டும்’னு அண்ணன் சொல்லிட்டார். அதுல கடும் கோபமான ராமசுப்பு, ‘இவனை அடிச்சுக் கொல்லுங்கடா’னு சொன்னார். உடனே அவர்கூட வந்திருந்த ஆளுங்க எங்க கண்ணு முன்னாடியே என் அண்ணன் தலையிலையும் பிறப்புறுப்பிலையும் கடுமையா தாக்கினாங்க. அதை எங்களால தடுக்க முடியல.

என் அண்ணன் இறந்தது தெரியாமலேயே, `ஏழாயிரம்பண்ணை போலீஸ் ஸ்டேஷ’னுக்கு போன் பண்ணின அ.தி.மு.க நிர்வாகி ஒருத்தர், ராமசுப்புவைத் தாக்கினதா என் அண்ணன்மேல வழக்கு போட்டுக் கைதுபண்ணச் சொல்லியிருக்கார். நாங்க ஸ்டேஷனுக்குப் போனப்போதான் அந்த விவரம் எங்களுக்குத் தெரிஞ்சது. ஆனா, போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் எல்லாம் ரொம்ப நேர்மையா வழக்கை விசாரிச்சு குற்றவாளிகளைக் கைதுசெஞ்சாங்க. இப்போ அவங்களை ஜாமீன்ல எடுக்க ஆளும்கட்சிக்காரங்க முயற்சி செய்றதா சொல்றாங்க. அதுதான் எங்களுக்கு ரொம்ப வேதனையா இருக்கு” என்றார்.

ராமசுப்பு
ராமசுப்பு

இந்தச் சம்பவம் பற்றி கள ஆய்வு செய்துள்ள எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர், “தமிழகத்தில் பல இடங்களில் சாதிபலம், பணபலம், அரசியல் செல்வாக்கு மூலம் ஊராட்சித் தலைவர் பதவிகளை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். இப்போது ஒரு கொலையே நடந்துவிட்டது. பொதுப்பிரச்னைக்கு குரல்கொடுத்த சதீஷ்குமார், திட்டமிட்டுக் கொல்லப்பட்டார். சதீஷ்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிகளை பிணையில் விடக் கூடாது. இனியாவது, கட்டப்பஞ்சாயத்துகள்மூலம் உள்ளாட்சிப் பதவிகள் ஏலம்விடப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

இதுகுறித்து விருதுநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியிடம் பேசினோம். “இந்தச் சம்பவம் கொடுமையானது. அந்தக் குடும்பத்தினரின் வேதனை எனக்கு நன்றாகப் புரிகிறது. குற்றவாளிகள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பது ஊடகங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். உண்மையில் அவர்கள் அ.தி.மு.க-வினரே கிடையாது. அவர்களை நான் பார்த்ததுமில்லை. குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க ஒருபோதும் உதவாது. சட்ட நடவடிக்கைகளிலும் தலையிட மாட்டோம்” என்றார்.