Published:Updated:

`திருட்டு போலச் சித்திரித்துள்ளனர்’ - விஸ்வ இந்து மகாசபை அமைப்பின் மாநிலத் தலைவர் சுட்டுக் கொலை

ரஞ்சித் பச்சன்
ரஞ்சித் பச்சன்

விஸ்வ இந்து மகாசபை அமைப்பின் தலைவர் இன்று காலை மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விஸ்வ இந்து மகாசபை அமைப்பின் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவராக இருப்பவர் ரஞ்சித் பச்சன். லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வசித்துவரும் இவர் இன்று காலை தன் நண்பருடன் இணைந்து காலை நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். சரியாக மத்திய மருந்து ஆராய்ச்சி அலுவலக கட்டடத்துக்கு அருகில் சென்றுகொண்டிருக்கும்போது இவருக்குப் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், துப்பாக்கியால் பலமுறை ரஞ்சித் பச்சனை சுட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். ரஞ்சித்துடன் சென்ற அவரின் நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்ம நபர், ரஞ்சித்தின் தங்கச் செயின் மற்றும் போனை கொள்ளையடிக்க முயன்று பின்னர் அவரை நோக்கிச் சுட்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தும் இது திட்டமிட்ட கொலையாக இருக்கவே வாய்ப்பிருப்பதாகவும் கொலை தெரியக் கூடாது என்பதற்காகவே திருட்டு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பற்றிப் பேசியுள்ள லக்னோ துணை கமிஷனர் தினேஷ் சிங், ``ரஞ்சித் பச்சனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. மற்றொருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தினேஷ் சிங்
தினேஷ் சிங்
ANI

குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். நாங்கள் இன்னும் ரஞ்சித்தின் குடும்பத்தினரிடம் பேசவில்லை. விரைவில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சமீபகாலமாக இந்து அமைப்பின் தலைவர்கள் கொல்லப்படுவது இது இரண்டாவது முறை எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு