Published:Updated:

`அப்பா முகத்தைக்கூட என் பிள்ளைய பார்க்கவிடாம பண்ணிட்டாங்களே!'- ரவுடி கொலையால் கதறிய 7 மாத கர்ப்பிணி

எஸ்.மகேஷ்

கோகுலுக்கு எதிரிகள் அதிகம் என்பதால், அவரை யார் கொலை செய்தார்கள் என போலீஸார் விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

gokul
gokul

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர், தணிகாசலம். இவரின் மகன் கோகுல் என்கிற கோகுல்நாத் (23). இவரின் மனைவி மீனா. இவர், 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கோகுல் மீது காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

gokul murder
gokul murder

இந்த நிலையில், ரவுடி கோகுலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசய்யாவுக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. வியாசர்பாடி தேசிங்காநந்தபுரம் 1-வது தெருவில் நேற்றிரவு, கோகுல் தனியாகச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல், கோகுலை ஓட ஓட விரட்டி அரிவாள், கத்தியால் வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்தம் வழிய கீழே விழுந்த கோகுல், உயிருக்குப் போராடினார்.

இந்தத் தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போலீஸார், கோகுலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் இறந்தார். கோகுல் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த அவரின் மனைவி மீனா, கதறி அழுதார். பிரேதப் பரிசோதனை முடிந்து கோகுலின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

gokul home
gokul home

கோகுலுக்கு எதிரிகள் அதிகம் என்பதால், அவரை யார் கொலை செய்தார்கள் என போலீஸார் விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கோகுலின் எதிரி ராசய்யா மற்றும் அவரின் கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. போலீஸாரின் பிடியில் 4 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கோகுல் கொலைசெய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி மீனா கதறி அழுதார். அப்போது அவர், "அப்பா முகத்தைக்கூட என் பிள்ளையப் பார்க்க விடாம இப்படி பண்ணிட்டாங்களே அந்த பாவிங்க..." என்று கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.