Published:Updated:

`போராடினோம்... செல்வாக்கால் தடுத்துவிட்டனர்' - உன்னாவ் இளம்பெண் மரணத்தில் கதறும் தந்தை!

`என் மகள் வாழவிரும்பினாள். அவளை எங்களால் காப்பாற்ற முடியவில்லை’ என உன்னாவ் இளம்பெண் மரணத்தில் தந்தை கதறல்.

உன்னாவ் இளம்பெண்
உன்னாவ் இளம்பெண்

``நான் சாகக்கூடாது என்னைக் காப்பாற்றுங்கள்; நான் வாழ விரும்புகிறேன், அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்” உடம்பில் 90 சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனை மருத்துவரிடம் கதறினாள் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். ஆனால், இப்போது அவர் உயிரோடு இல்லை. நேற்று நள்ளிரவு அவரது சுவாசம் நின்றது. கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களால் இந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்துச் சென்றார். அதன் பின்னர் தலைமறைவானார். மற்றொரு நபர் சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார்.

உன்னாவ் பகுதி
உன்னாவ் பகுதி

வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றபோது ஒரு கும்பல் இவரைக் கடத்தியது. அந்தக் கும்பலால் கடுமையான தாக்குதலுக்குள்ளானார். பின்னர் அந்தக் கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது. தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தவர், பற்றி எரிந்த தீயுடன் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து உதவியை நாடினார். சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சைப் பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார்.

``வாழ விரும்புகிறேன்; உயிரோடு இருப்பேனா?"- மருத்துவர்களிடம் கதறிய உன்னாவ் இளம்பெண்

இவரது மரணம் அந்தக் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் இறப்பு குறித்து பேசிய அவரின் தந்தை, ``என் மகளின் இந்த நிலைக்குக் காரணமானவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். அதை நான் என் கண்களால் பார்க்க வேண்டும். எனக்கு பணமும் வேண்டாம் வேறு எந்த உதவியும் வேண்டாம். என் மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை ஹைதராபாத்தில் என்கவுன்டர் செய்ததுபோல் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும். எம்.எல்.ஏ, அரசு அதிகாரிகள் என யாரும் எங்களுக்கு உதவுவதாக இல்லை.

டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது
டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது

எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் குற்றவாளிகள் தங்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்துவிட்டனர். நாங்கள் புகார் அளித்தபோது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை. வழக்கு பதிவு செய்வதற்கே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. நீதிமன்ற படி ஏறிய பின்னர்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. என் மகள் வாழ விரும்பினாள். குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினாள். ஆனால், எங்களால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை” என வேதனையோடு கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், ``நாம் அவருக்கு நீதி வழங்க தவறிவிட்டோம். இது நம் அனைவரின் தோல்வி, நாம் அனைவரும் இதில் குற்றவாளிகள். ஆனால், இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் நிலவும் சட்ட ஒழுங்கை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசாங்கம் ஏன் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. புகார் தெரிவித்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத அதிகாரியின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உன்னாவ் இளம்பெண்ணின் உறவினர் கூறுகையில், ``பிரியங்கா எங்களுடன் சேர்ந்து நீதிக்காகப் போராடுவேன் என்றார். எங்களின் ஒரே கோரிக்கை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவரது ஆன்மா சாத்தியடையும்” என்றார்.