Published:Updated:

`3 கொலைகள்; டிக்டாக் வில்லன்; போதை அடிமை!' - உ.பி காவலர்களைத் திணறடித்த `ஜானி தாதா'

குற்றப் பின்னணி எதுவும் இல்லாத ஒருவர் திடீரென 3 கொலைகள் செய்ய என்ன காரணம் என்று புரியாமல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அஸ்வின்
அஸ்வின்

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார். டிக்டாக்கில் ஜானி தாதா என்ற பெயரில் வீடியோ வெளியிடும் இவர், `தான் ஒரு வில்லன்’ என்று பாவித்துவந்தார். `நான் எல்லாவற்றையும் அழித்துவிடுவேன்’, `இந்த உலகத்தை விட்டுச்செல்கிறேன்’ `டெவில் இஸ் ரெடி’ இப்படி பல்வேறு பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார். இதனிடையே, பா.ஜ.க பிரமுகர் காஷ்யப்பின் மகன் ராகுல் மற்றும் அவரின் மருமகன் கிருஷ்ணா என்ற இருவரையும், மது அருத்துவதற்காக வீட்டுக்கு அழைத்துள்ளார்.

டிக் டாக்
டிக் டாக்

அப்போது திடீரென இருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் அஸ்வின். இதையடுத்து தலைமறைவான அவர், நித்திகா ஷர்மா என்பவரையும் கொலை செய்துள்ளார். துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துவருபவர் நித்திகா. அவர் தன் திருமணத்துக்காக சொந்த ஊரான பிஜ்னூர் வந்துள்ளார். அவருக்கும், மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவரையும் அஸ்வின் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். இதுதொடர்பாக நித்திகாவின் குடும்பத்தினர், ``கடந்த 2002-ம் ஆண்டு நித்திகா மற்றும் அஸ்வினுக்கு இடையே பிரச்னை இருந்தது. அதையடுத்து, நித்திகா, துபாய் சென்றுவிட்டார். அந்தப் பிரச்னையை இருவரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது நாடு திரும்பிய அவரை அஸ்வின் கொலை செய்துவிட்டார்’ என்று தெரிவித்தனர். அந்த 3 கொலைகளையும் செய்தவர் ஒரே நபர்தான் என காவல்துறையினருக்கு தெரியவந்தது. நித்திகா கொலை வழக்கில், துப்புக் கிடைத்தபோதிலும், மற்ற இரண்டு கொலைகளுக்கும் என்ன காரணம் என்று தெரியாமல் காவல்துறை விழிபிதுங்கியது. குற்றப்பின்னணி எதுவும் இல்லாத ஒருவர், திடீரென 3 கொலைகள் செய்ய என்ன காரணம் என்று புரியாமல் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

தற்கொலை
தற்கொலை

அஸ்வின் உறவினர்களோ, அவர் போதைக்கு அடிமையாகி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என்கிறார்கள். தொடர்ந்து தலைமறைவானவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில்தான், பேருந்து ஒன்றில் அவர் செல்வதாகக் கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தினர். பிஜ்னோர் அருகே அவர் பயணித்த பேருந்தை நிறுத்தி பரிசோதனை செய்ய முயன்றனர் காவலர்கள். அப்போது, போலீஸாரிடம் சிக்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரிடம் ஒரு துப்பாக்கி மற்றும் 14 பக்கங்கள் கொண்ட நோட்டு ஒன்று இருந்துள்ளது. அந்த நோட்டில், 27 வயது இளம்பெண் உள்ளிட்ட மூவரைக் கொலை செய்தது குறித்து எழுதிவைத்துள்ளார்.

இதுதொடர்பாக பிஜ்னோர் எஸ்.பி சஞ்சிவ் கூறுகையில், ``பதாபூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்றை சோதனையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது தன்னுடைய முகத்தை ஒருவர் கர்சீப்பால் கட்டிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த காவலர் ஒருவர், கர்சீப்பை அகற்றும்படி கூறினார். உடனே, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். பின்னர்தான் அவர் அஸ்வின் என்ற ஜானி தாதா என்பது எங்களுக்குத் தெரியவந்தது” என்றார். கடைசியாக அவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `உலகத்தை விட்டுச்செல்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.