Published:Updated:

நான்காண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கு! - பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன்

இந்தக் கொள்ளை சம்பவத்தில் முருகன் என்ற நபர் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

முருகன் உள்ளிட்ட கொள்ளையர்கள்
முருகன் உள்ளிட்ட கொள்ளையர்கள்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் மேற்குப்பக்கச் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் 13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். கடந்த 2-ம் தேதி அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

லலிதா ஜூவல்லரி
லலிதா ஜூவல்லரி

போலீஸாரின் தீவிர விசாரணையில், நடந்த கொள்ளையை திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன், அவரின் அக்கா கனகவல்லியின் மகன் சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை தஞ்சாவூர் எடுத்துச் சென்ற அந்தக் கும்பல், அங்குள்ள வனப்பகுதியில் வைத்து நகைகளைப் பங்குபோட்டுள்ளது தெரியவந்தது. அடுத்து போலீஸாரிடமிருந்து தப்பிக்க ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

`போலீஸ் என்னை பலிகடாவாக்கப் பார்க்கின்றனர்!’ - லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷ்

இதற்காக தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் நீடாமங்கலத்துக்குச் சென்ற சுரேஷ், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தன் நண்பர் மணிகண்டனை வரவழைத்து இருசக்கர வாகனம் மூலம் வீட்டுக்குச் சென்றார். அப்போது, திருவாரூர் மடப்புறம் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸாரிடம் மணிகண்டன் மட்டும் சிக்கினார். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிய சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். `நகைக்கடை கொள்ளைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் போலீஸார் தன்னை பலிகடாவாக்கப் பார்ப்பதாக' அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முருகன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

லலிதா ஜூவல்லரி
லலிதா ஜூவல்லரி

இவர் நாடு முழுவதும் பல்வேறு வங்கி, ஏடிஎம் கொள்ளைகளில் தொடர்புடையவர் ஆவார். இவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கொள்ளை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முருகன், பெங்களூரு ந்வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.

போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய நிலையில், கர்நாடகாவின் பனஸ்வாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்திருக்கிறார்.

முருகன்
முருகன்

நான்காண்டுகளுக்கு முன்பாக ரூ.48,000 கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முருகனை கர்நாடகக் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சரணடைந்த முருகனை, பெங்களூரு நீதிமன்றம் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறது. முருகன் மீது, தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.