Published:Updated:

சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கோம்!’ - சோகத்திலிருந்து மீளாத குடும்பத்தினர்

அஞ்சலி செலுத்திய கனிமொழி
அஞ்சலி செலுத்திய கனிமொழி

”இதில் தவறு செய்தவர்கள் மேல்நிலைக் காவல்அதிகாரிகள், சாட்சியங்கள் கீழ்நிலைக் காவலர்கள். அவர்களோட அதிகார பலத்தால சாட்சியங்களை மிரட்டி வழக்குல இருந்து தப்பிச்சுடக் கூடாது” என்கிறார் ஜெயராஜின் மகள் பெர்சிஸ்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ‘ஏ.பி.ஜே மொபைல் சிட்டி’ என்ற பெயரில் செல்போன் கடை நடத்திவந்தார் பென்னிக்ஸ். இவரின் தந்தை, ஜெயராஜும் மகனுடன் சேர்ந்து கடையைப் பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கில், குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் பென்னிக்ஸின் ஜெயராஜுவுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ். தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையைத் தாக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து தடுக்க முயன்றுள்ளார்.

உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்

இதனால், ஆத்திரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில்வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவர் மீதும் வழக்கை ஜோடித்த போலீஸார், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரையும் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவர்களைக் கோவில்பட்டிக் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில், 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீஸாருக்கு மாற்றப்பட்டதும் 10 போலீஸாரும் கைதுசெய்யப்பட்டு மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கு, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் கனிமொழி
ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் கனிமொழி

சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையிலும், போலீஸார் மீது தவறு இருப்பது நிரூபணம் செய்யப்பட்டு, இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மீதமுள்ள ஒன்பது பேரும் சிறையில் உள்ளனர். இது தொடர்பான வழக்கும் நடைபெற்றுவருகிறது. தந்தை, மகன், படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில், இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தான்குளம் பஜாரிலுள்ள பென்னிக்ஸின் ‘ஏ.பி.ஜே மொபைல் சிட்டி’ கடையின் முன்பு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், வியாபாரிகள், ஊர்மக்கள் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “அப்பாவிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸாரால் துன்புறத்தப்பட்டு உயிரிழந்து ஓராண்டாகிறது. காவல் நிலையங்களில் போலீஸாரின் துன்புறுத்தலால் பலநூறு பேர் உயிரிழந்துவருகின்றனர்.

ஜெயராஜின் மகள் பெர்சிஸிக்கு ஆறுதல் கூறிய கனிமொழி
ஜெயராஜின் மகள் பெர்சிஸிக்கு ஆறுதல் கூறிய கனிமொழி

அதிகாரத்தை ஏவிவிட்டு காவல் நிலையங்களில் மரணம் அடைந்த அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் குரல்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. சாத்தான்குளம் இரட்டைக் கொலைச் சம்பவத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், `இந்த வழக்கை கேரள மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து, ’வழக்கை மாற்றக் கூடாது’ என வாதம் செய்தது. ஜெயராஜின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வர், அவர்களோடு நின்று அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்” என்றார்.

ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிஸ், “அப்பாவும் தம்பியும் எங்களைவிட்டுப் பிரிஞ்சு ஒரு வருஷம் ஆச்சுது. ஆனாலும், நாங்க யாரும் இன்னும் அந்தச் சோகத்துல இருந்தது மீளலை. ஒரு குடும்பத்துல தகப்பன்தான் அந்தக் குடும்பத்தோட ஆணி வேரு. தகப்பனுக்குப் பிறகு அண்ணன், தம்பிங்கதான் குடும்பத்தைச் சுமப்பாங்க. எங்க வீட்ல ஆணி வேரா இருந்த அப்பாவையும், பக்க வேரா இருந்த தம்பியையும் இழந்துட்டோம். யாருமே இல்லாத நிர்கதியா ஆயிட்டோம். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்துல நடந்துட்டுவருது. கொரோனா ஊரடங்குனால விசாரணை தாமதமாகுது. சிறையில இருக்குற ஒன்பது போலீஸும் ஜாமீன் கேட்டு தொடர்ந்து நீதிமன்றத்துல மனு கொடுத்துட்டுதான் இருக்காங்க.

மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி
மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி

ஆனா, இதுவரைக்கும் யாருக்குமே ஜாமீன் கிடைக்கலை. அதுக்காக நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம். போலீஸாரின் தவறு முழுமையா நிரூபணமாயிடுச்சு என்றாலும், இதில் தவறு செய்தவர்கள் மேல்நிலைக் காவல் அதிகாரிகள், சாட்சியங்கள் கீழ்நிலைக் காவலர்கள். அதனால, அவர்களோட அதிகார பலத்தால சாட்சியங்களை மிரட்டி வழக்குல இருந்து தப்பிச்சுடக்கூடாது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நீதிமன்றத்தின் மேல் முழு நம்பிக்கைவெச்சிருக்கோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு