சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக இறந்தவரின் மனைவி அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் புகாரின்பேரில் போலீஸார் அந்த போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கொலை வழக்கு பதிவு செய்து ஊழியர்கள் ஏழு பேரைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதையடுத்து, அந்த மறுவாழ்வு மையத்துக்கு முறையான உரிமம் இல்லாத நிலையில், அங்குச் சிகிச்சை பெற்று வந்த 12 பேரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்துக்கு போலீஸார் மாற்றினார்கள். மேலும், தலைமறைவாக உள்ள அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன், அவர் மனைவி லோகேஸ்வரியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவருக்கும், அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே ராஜ் ஆறு மாதங்கள் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்போது, அந்த மையத்தில் ஊழியர்கள் தன்னை அடித்து சித்ரவதை செய்வதை ராஜ் அவர் வீட்டில் சொல்லியிருக்கிறார். அதனால், கார்த்திகேயனுக்கும், ராஜுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன், தங்களிடம் வீடியோ காலில் ராஜைக் கொலை செய்து விடுமாறு கூறியதாகவும், அதன் பேரிலேயே தாங்கள் ராஜைத் தாக்கிக் கொலை செய்ததாகவும் கைதானவர்கள் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீஸார் தலைமறைவாக இருக்கும் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரைக் கைது செய்யத் தீவிரம் காட்டி வருகின்றனர்.