Published:Updated:

பக்தர்கள் வேடத்தில் கஞ்சா கடத்தல்... விழித்துக்கொள்ளுமா தூத்துக்குடி போலீஸ்?#TamilnaduCrimeDiary

க்ரைம் ஸ்டோரி
க்ரைம் ஸ்டோரி

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. போலீஸ் சாட்டையை எடுக்கத் தவறினால், கஞ்சா வியாபாரிகளைக் கட்டுப்படுத்துவது இனி கடினமாகிவிடும்.

தூத்துக்குடியில் துறைமுகமும் தொழிற்சாலைகளும் இருப்பதால் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை நடக்கிறது. வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கு வரும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மூலமாக சாதாரண பைகளில் துணிகள் கொண்டு வருவது போல கஞ்சா கடத்தப்படுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர். சமூக விரோதிகள், சில சமயங்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விரதமிருந்து வரும் பக்தர்கள் தோற்றத்திலும் கஞ்சா பொட்டலங்களைக் கடத்துகிறார்கள். கஞ்சாவைப் பொடியாக்கி சோப்புக்கட்டிபோல தயாரித்து கடத்த முயன்று போலீஸாரையே அதிர வைத்த சம்பவமும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ``இப்படியெல்லாம் கஞ்சாவைக் கடத்த முடியுமா?” எனச் சிந்திக்க வைக்கும் வகையில் கடத்தல் நடப்பது தூத்துக்குடியில் மட்டும் தான்.

தூத்துக்குடி நகர் மற்றும் சப் டிவிஷன்களில் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு 5 முதல் 10 கஞ்சா வழக்குகள் சராசரியாகப் பதிவு செய்யப்படுகிறன. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடியில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,550 கிலோ கஞ்சாவும் இந்த ஆண்டு தற்போது வரை 750 கிலோ கஞ்சாவும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டக் காவல்துரை அதிகாரிகளிடம் பேசினோம். ``தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்து வருபவர்களின் பட்டியலில் 78 பேர் இடம்பெற்றிருந்தாலும் இதில் சுற்றிவளைத்து தொடர்ந்து சிக்குவது வெறும் 25 பேர்தான். 10 முதல் 15 கிராம் கஞ்சா ரூ.150 முதல் 200 வரை விற்கப்படுகிறது. கூலித்தொழிலாளர்கள் முதல் மாணவர்கள் வரை வாடிக்கையாளர்கள் பெருகி விட்டதால் கஞ்சாவுடன், காய்ந்த பப்பாளி இலையைத் தூளாக்கியும் சேர்த்து கலப்படம் செய்து போலிச் சரக்கும் விற்கப்படுகிறது. அதனால், `ஒரிஜினல் டோப் வேணுமா? 350 ரூபாய் கொடு’ எனக் கூடுதல் விலைக்கு விற்று பணம் பார்க்கிறார்கள். எங்களால் முடிந்தளவுக்குக் கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, ``ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து ரயில்மூலம் அதிகளவு கஞ்சா தமிழகத்துக்கு இறக்குமதி ஆகிறது. இக்கடத்தலில், வடமாநிலப் பெண்களே முக்கியக் காரணமாக இருக்கின்றனர். இவர்கள், துணிப்பைகளில் துணிகளை எடுத்துச்செல்வதுபோல, கஞ்சாவை பொட்டலங்களில் சுருட்டி வைத்துவிடுகின்றனர். அதன்மீது சென்ட், ஸ்பிரே போன்ற வாசனைத் திரவியங்களைத் தெளித்து எடுத்துச்செல்கிறார்கள். இதனால், ரயிலில் பயணம் செய்யும் சக பயணிகள் யாருக்கும் சந்தேகம் வராதபடி கடத்துகிறார்கள். சில சமயங்களில் கல்லூரி மாணவர்களையும் கஞ்சா கடத்த பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில், மதுரையிலிருந்து தேனி, போடி வழியாகத்தான் கஞ்சா கடத்தப்பட்டுவந்தது. இப்பாதையில் போலீஸாரின் கெடுபிடி அதிகரித்துள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி வழியாக தற்போது கடத்தப்படுகிறது. இக்கடத்தல் பற்றி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்கள் வந்தாலும், கஞ்சா கடத்திச்செல்லும் வாகனங்களை சிக்னல்கள்மூலம் பின் தொடர்ந்து பிடிப்பது என்பது சவால் நிறைந்தது. இவர்கள், தாங்கள் செல்லும் பாதையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்” என்றனர்.

சபாஷ்!
கஞ்சா, மணல் கடத்தல்… குண்டாஸைக் கையில் எடுத்த தேனி போலீஸ்!

தேனியில் கஞ்சா பழக்கத்தாலும் மணல் கடத்தலாலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குற்றச்சம்பவங்களை ஒடுக்கும் விதமாக, குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்வது தேனியில் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளில் 1970-ம் ஆண்டு முதல் 1990 வரை, கஞ்சா பயிரிடப்பட்டுவந்தது. அரசின் பல்வேறு நெருக்கடிகளால், கஞ்சா பயிரிடுவது கட்டுப்படுத்தப்பட்டது. அதனால், இத்தொழிலில் ஈடுபடுவோர் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலப் பகுதிகளில் விளைவிக்கப்படும் கஞ்சாவை வாங்கிவரும் ஏஜென்ட்களாக மாறினர். தேனி மாவட்டத்திற்கு வரும் கஞ்சா, தரம் பிரிக்கப்பட்டு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, கோயம்புத்தூர் வரை மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கஞ்சா விற்பனையின் தலைமையிடமாக தேனி உள்ளது என்றே சொல்லாம்.

கஞ்சா
கஞ்சா
` வேண்டாம் ஜெகன், 42 வருட அனுபவத்தில் சொல்கிறேன்!’ - 3  தலைநகரங்களால் கொதித்த வெங்கைய நாயுடு

தினம் தினம் கஞ்சா வழக்கு பதிவு செய்யும் தேனி போலீசார், கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குண்டாஸ் சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும், அரசியல் துணையோடு நடக்கும் கடத்தல் மணல் மற்றும் மது விற்பனையைக் கட்டுப்படுத்தவும் குண்டாஸ் கைதுகள் பாய்கின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேனி மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “இம்மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், மது விற்பனை, தொடர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதானவர்களில், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் குண்டாஸ் சட்டம் பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில்தான் குண்டாஸ் சட்டம் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 24 பேரும் இந்த ஆண்டு 30 பேரும் குண்டாஸ் சட்டத்தின் படி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு குண்டாஸ் கைதுகள் தமிழகத்தில் தேனியில்தான் நடந்திருக்கிறது எனலாம்.

 சாய் சரண் தேஜஸ்வி
சாய் சரண் தேஜஸ்வி

முன்னாள் எஸ்.பி பாஸ்கரன், குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டத்தினைப் பயன்படுத்த ஆர்வம் காட்டினார். அவரை விஞ்சும் வகையில், இப்போது எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள சாய் சரண் தேஜஸ்வி, பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் எட்டுப் பேர் மீது குண்டாஸ் சட்டம் போட்டிருக்கிறார். குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்படுவதால் குற்றச்செயல்கள் குறைகின்றன. அடுத்தடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயனுள்ளதாக இருக்கிறது. மாவட்ட கலெக்டரும் குற்றச்சம்பவங்கள் குறைவதில் அக்கறையோடு இருக்கிறார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு