Published:Updated:

`ரூ.24,167 இன்சூரன்ஸ் பணம்; அவமானம்!' - மேற்கு வங்க கொலையில் திடீர் திருப்பம்

West Bengal Couple
West Bengal Couple

மேற்கு வங்கத்தில், பாந்து பிரகாஷ் பால், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், ஆர்.எஸ்.எஸ் ஊழியர் பாந்து பிரகாஷ் பால், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் அக்டோபர் 8-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். பிரகாஷ் குடும்பத்தினர், துர்கா பூஜைகளை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், துர்கா பூஜை தினத்தன்று அவரது வீடு வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை. வீடு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோது, பிரகாஷ் அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். இதையடுத்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Murder
Murder

ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் காரணங்களுக்காகவே இந்தக் கொலைகள் நடந்திருக்கும் என பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டினர். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்தில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்படுவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பாந்து பிரகாஷ் பாலின் தாயார் பேசுகையில், ``என் மகன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லை. பள்ளி ஆசிரியரான அவனுக்கு, அன்றாட பணிகளை செய்வதற்கே போதிய நேரமில்லை. வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருந்தான். அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை” என்று கூறினார்.

பாந்து பிரகாஷ் பால், ஜியாகஞ்ச் பகுதிக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் குடிவந்துள்ளார். அதனால் அவரைப் பற்றி அப்பகுதி மக்களுக்குப் பெரிதாக எதும் தெரியவில்லை. அமைதியான சுபாவம் கொண்டவர். இதுவரை எந்தப் பிரச்னையிலும் அவர் ஈடுபட்டதில்லை என போலீஸ் விசாரணையில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாந்து, நள்ளிரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர். அவர்களின் சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, விசாரணையில் சில தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. நள்ளிரவில் ஒருவர் கத்தியுடன் ஓடியதாகவும் திருடனாக இருப்பான் என சந்தேகித்ததாகச் சிலர் கூறியுள்ளனர்.

`ரூ.24,167 இன்சூரன்ஸ் பணம்; அவமானம்!' - மேற்கு வங்க  கொலையில் திடீர் திருப்பம்

அதேபோல், பாந்து வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பங்கஞ் சர்கார் போலீஸாரிடம் கூறுகையில், ``நள்ளிரவில் இளைஞர்களின் கூச்சலைக் கேட்டு வெளியில் வந்து பார்த்தேன். என் வீட்டின் அருகே இருக்கும் கோயிலைக் கடந்து செல்லும்போது திடீரென ஒரு ஆள் என்னைக் கடந்து ஓடினான். நான் அவனை விரட்டிச் சென்றேன். அந்த நபர் கொலை செய்துவிட்டு ஓடுகிறான் என நினைக்கவில்லை. திருடன் என்றுதான் நினைத்தேன். அருகில் இருக்கும் மசூதி வரை துரத்திச்சென்றேன். ஆனால், அவன் தப்பிவிட்டான். பாந்து குறித்து எனக்கு அதிகம் தெரியாது. அவர் இந்தப் பகுதிக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகிறது” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களைக்கொண்டு போலீஸார் ஆய்வுசெய்தனர். இந்நிலையில், உட்பால் குமார் என்பவரின் செல்போன் எண் அந்தப் பகுதியில் இருந்ததாகத் தெரிந்தது. உட்பால் குமார், அவரது உறவினர் என்பது தெரியவந்தது.

வீட்டில் சடலமாகக் கிடந்த கணவர், கர்ப்பிணி மனைவி, 8 வயதுக் குழந்தை!- மேற்கு வங்கத்தை உலுக்கிய கொலை

பாந்து பிரகாஷ் பால், போன் நம்பருக்கு வந்த எண்களை போலீஸார் ஆய்வுசெய்தபோது, உட்பால் குமார் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, பாந்து பிரகாஷ் குடும்பத்தினரைக் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இன்ஷூரன்ஸ் விஷயத்தில் இருவருக்கும் இருந்த பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடந்தாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``உட்பால் 11 வருஷத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். வருடத்துக்கு 24,167 ரூபாய் பிரகாஷ் மூலம் செலுத்திவந்துள்ளார். முதல் வருடம் தொகையைக் கட்டியதற்கான ரசீதைக் கொடுத் துள்ளார். அடுத்த வருடம் கட்டிய தொகைக்கான ரசீதை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, பிரகாஷிடமிருந்து சரியான பதில் இல்லை. தனது பணத்தைக் கொடுக்குமாறு உட்பால் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் அவரை கடுமையாகத் திட்டி அனுப்பியுள்ளார். தான் அவமானப்பட்டதாக உணர்ந்த உட்பால், பிரகாஷை தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார்.

கொலை
கொலை

இந்நிலையில், விஜயதசமி அன்று இரவு 10.30 மணிக்கு உட்பால், பிரகாஷூக்கு போன் செய்து, உங்களை நேரில் பார்க்க வேண்டும், வீட்டுக்கு வருகிறேன் எனக் கூறியுள்ளார். வீட்டுக்கு வந்தவரை பிரகாஷ் வரவேற்றுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக்கொண்டு பிரகாஷைக் கொலை செய்துள்ளார். பக்கத்து அறையில் இருந்த 8 மாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்துள்ளார். கொலை செய்யும் நோக்கத்துடன்தான் இந்தப் பகுதியில் இருந்த அவரது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். முதலில், கொலை செய்ததை ஒப்புக்கொள்ள மறுத்தார். சம்பவத்தன்று, தான் வேறொரு பகுதியில் இருந்ததாகக் கூறினார். செல்போன் அழைப்புகளை வைத்துதான் உட்பாலை நெருங்கினோம்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட பிரகாஷ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு