Published:Updated:

பேரம் பேசிய பிரமுகர்கள்; மூடி மறைக்கப்பட்ட தொழிலாளர்களின் மரணம்!- ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

ராணிப்பேட்டையில் உள்ள அபாயகரமான ரசாயன கழிவு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் மூடி மறைக்க, உள்ளூர் அரசியல்கட்சி பிரமுகர்கள் பேரம் பேசி பணம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேரம் நடந்த நிறுவனம்
பேரம் நடந்த நிறுவனம்

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதி 3-ல், ‘குஜராத் என்விரோ புரொடக்சன் அண்டு இன்ஃப்ரா ஸ்டரக்சர் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. பெர்ரஸ் சல்பேட், ஹைட்ரேட் லைம், பாலி அலுமினியம் குளோரைட் உள்ளிட்ட அபாயகரமான ரசாயன கழிவுகளிலிருந்தும், நச்சுக் கழிவுகளிலிருந்தும் சிமென்ட் தயாரிக்கத் தேவைப்படும் எரிசக்தி மூலப்பொருள்களை இங்கு உற்பத்தி செய்கிறார்கள். 

தீ விபத்து
தீ விபத்து

கடந்த மாதம் 28-ம் தேதி காலை, இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வாலாஜாபேட்டை சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரவீன்குமார் (33) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அரிக்குமார் மகன் திலீப்குமார் (26) ஆகிய இரண்டு தொழிலாளர்களும் பலத்த தீக்காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். போலீஸாரிடம் பிரவீன்குமார் மரண வாக்குமூலம் கொடுத்தார். அதில், ‘‘மேற்கண்ட நிறுவனத்தில் நான் மெயின்டனன்ஸ் பிரிவில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தேன். சிமென்ட் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களைத் தயாரிக்கும் ‘ஃபிட்’ பிரிவில் நாங்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தோம். மெஷினை ஆபரேட் செய்யும்போது, நான் கிரீஸ் போட்டேன். அப்போது, திடீரென தீ பற்றியது. 

உயிரிழந்த தொழிலாளி
உயிரிழந்த தொழிலாளி

நாங்கள் இருவருமே பாதுகாப்பு உபகரணங்கள், ஹெல்மெட், மாஸ் கிளவுஸ் அணிந்திருந்தோம். எனினும், தீ ஜுவாலையில் சிக்கி படுகாயமடைந்துவிட்டோம்’’ என்று கூறியதாக எழுத்துபூர்வமாகக் காவல்துறையினர் பதிவுசெய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனிடையே, சி.எம்.சி-யில் அனுமதிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 30-ம் தேதி பிரவீன்குமாரும், இரண்டு நாள்களுக்கு முன்பு திலீப்குமாரும் உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக, குஜராத் நிறுவனத்தின் அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இவ்வளவு பெரிய சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலர் பிரச்னையைப் பெரிதுபடுத்தாமல் இருக்கப் பணம் பெற்றுக்கொண்டு அமைதியாகச் சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிறுவனம் தரப்பில் செட்டில்மென்ட் கொடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. 

ரசாயன கழிவு நிறுவனம்
ரசாயன கழிவு நிறுவனம்

இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், ‘‘எங்களின் கடமையைச் சரியாகச் செய்துவிட்டோம். சம்பவம் வெளியில் தெரிந்தால் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் பெரிய அளவில் பேரம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாகப் பேசவந்த உள்ளூர் பிரமுகர்கள் பலர் பணத்துக்குப் பணிந்துவிட்டனர்’’ என்றனர்.

சப்-கலெக்டர் இளம்பகவத்திடம் பேசினோம். ‘‘சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. தாசில்தார் தலைமையிலான குழு, குஜராத் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். ‘சீல்’ வைப்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை’’ என்றார்.

விபத்து ஏற்பட்ட நிறுவனம் தரப்பில் பேசிய அதிகாரி ஒருவர், ‘‘எதிர்பாராமல் நடந்த விபத்து அது. உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்திலேயே பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்ததாகக் கூறியிருக்கிறார். தவிர, பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களுக்கு நிறுவனம் தரப்பில் பண உதவி செய்திருக்கிறோம்’’ என்றார்.