Published:Updated:

சீர்காழி: தன்ராஜின் காரிலேயே கொலையாளிகள் தப்பியது ஏன்?! - இரட்டைக் கொலைச் சம்பவத்தில் நடந்தது என்ன?

கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம்
கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம்

சீர்காழி வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க், சிடி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். செல்போன் பயன்படுத்தினால் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால், யாரும் செல்போன் பயன்படுத்தவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கடந்த 27-ம் தேதி நடந்த இரட்டைக் கொலை, கொள்ளை மற்றும் என்கவுன்ட்டர் சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரமேஷ் படேல், மணீஷ்
ரமேஷ் படேல், மணீஷ்

சீர்காழி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான தன்ராஜ் செளத்ரி. இவர் சீர்காழியை அடுத்துள்ள தர்மகுளம் பகுதியில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்திவருகிறார். மேலும், நகை மொத்த வியாபாரமும் செய்துவருகிறார். தன்ராஜ் செளத்ரி, அவர் மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் வசித்துவந்திருக்கிறார். இவர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களால் தன்ராஜ் செளத்ரி மனைவி ஆஷாவும், மகன் அகிலுமும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை நிகழ்ந்த அன்று, என்ன நடந்தது என்பதை தன்ராஜ் செளத்ரி உறவினர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரித்தோம். ``ஜனவரி 27-ம் தேதி, காலை 6:30 மணியளவில், தன்ராஜ் செளத்ரியின் வீட்டுக் கதவை சில மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். மர்ம நபர்கள் இந்தியில் பேசியதைக் கேட்டு அகில் கதவைத் திறந்திருக்கிறார். கதவைத் திறந்த அடுத்த கணமே விரைந்து வீட்டுக்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் மகன் அகிலின் கழுத்தை வெட்டியிருக்கிறார்கள். மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அகிலின் தாய் ஆஷாவின் தலையைப் பிடித்து சுவரில் மோதி, சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் கொலையாளிகள்.

கொள்ளையன்  மகிபால்சிங்  சடலம்
கொள்ளையன் மகிபால்சிங் சடலம்

தன்ராஜ் செளத்ரி கண்முன்னே மனைவி மற்றும் மகனைத் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற நிலையில், "நகைகள் இருக்கும் இடத்தை சொல்லு . இல்லையென்றால் உங்களுக்கும் அதே கதிதான்" என்று மிரட்டவே, 'எங்களை விட்டுவிடுங்கள். நகை இருக்கும் இடத்தைச் சொல்லிவிடுகிறேன்' என்று கூறி நகைகள் இருப்பிடத்தைக் காட்டியிருக்கிறார்.

தன்ராஜ் செளத்ரி படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழுள்ள ரகசியப் பெட்டியில் நகை இருப்பதை அறிந்துகொண்ட மர்மக் கும்பல், இரண்டு பைகளில் 12.5 கிலோ தங்க நகைகளையும், 6.75 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றிருக்கிற. வீட்டில் மற்றோர் இடத்தில் லாக்கரில் சுமார் 20 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. படுகாயத்துடன் கதறிய தன்ராஜ் செளத்ரி, மருமகள் நிகில் ஆகியோர் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் தந்திருக்கிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.

கும்பகோணத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மொத்த வியாபாரம் செய்யும் ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரியுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த மணீஷ் உதவியாக இருந்து வந்திருக்கிறான். சீர்காழிப் பகுதியில் நகை விற்பனை செய்து, பணம் பெறுவதற்கு அந்த வியாபாரியுடன் மணீஷும் உடன் வந்து தனராஜ் செளத்ரியின் வசதி வாய்ப்புகள் அனைத்தையும் தெரிந்துகொண்டிருக்கிறான்.

ஆஷா, மகன் அகில்
ஆஷா, மகன் அகில்

பணத்தாசை கொண்ட மணீஷ், தன் நண்பர்களான ரமேஷ் படேல், மகிபால்சிங், கர்ணாராம் ஆகியோரோடு தன்ராஜ் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, கடந்த 27-ம் தேதி காலை கும்பகோணத்திலிருந்து காரில் கிளம்பி சீர்காழி பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு தன்ராஜ் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, பின்னர் கொள்ளை அடித்துள்ளனர். `கொள்ளையடிக்க வந்த இடத்தில் கொலைகளா...’ என்று பயந்த கர்ணாராம் காரை எடுத்துக்கொண்டு தான் மட்டும் தப்பிச் சென்றுவிட்டார்.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் படேல், மணீஷ், மகிபால் சிங் மூவரும் இரண்டு பைகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தோடு, தன்ராஜ் செளத்ரியின் காரிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க், சிடி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளனர். மூவரும் செல்போன் பயன்படுத்தினால் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால், யாரும் செல்போன் பயன்படுத்தவில்லை.

சீர்காழி கொலை: ஜெயங்கொண்டத்தில் போடப்பட்ட பிளான்... சிக்கிய கொள்ளையர்கள்!

அதே தினத்தன்று, சீர்காழி பகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருந்ததால், சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழிப் பகுதியைச் சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் கொள்ளையர்கள் தப்பித்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட, காரை சீர்காழியை அடுத்துள்ள ஓலையாம்புத்தூரில் நிறுத்திவிட்டு, எருக்கூர் என்ற கிராமத்தில் வயல் பகுதியில் பதுங்கினர்.

தங்கள் கிராமத்தில், உடல் முழுவதும் ரத்தக் கறைகளோடு, நகைகளோடு இருந்த நபர்களைப் பார்த்த கிராமவாசிகள் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான போலீஸார் கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர்.

போலீஸாரிடமிருந்து தப்பிக்க, தாங்கள் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொள்ளையர்கள் பயன்படுத்தவே, போலீஸார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கொள்ளையர்களின் தலைவன் மகிபால் சிங் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கொள்ளையர்களிடமிருந்து நகை, பணம், கார் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். சம்பவம் நடந்த, மூன்று மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் குழுவுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

சீர்காழி
சீர்காழி

படுகாயமடைந்த தன்ராஜ் செளத்ரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் கொள்ளையர்கள் மணீஷ், ரமேஷ் படேல் இருவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை கால் உடைந்து சிகிச்சை பெற்று சிறையிலடைக்கப்பட்டனர்

சீர்காழியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட மகிபால்சிங் உடலை சீர்காழி அரசு மருத்துவமனை பரிசோதனைக்கூடத்தில் மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் அமிர்தம் முன்னிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நவீன் மற்றும் சிவகுமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து, பிரேதத்தை இறந்த நபரின் சித்தப்பா லக்சிங் என்பவரிடம் ஒப்படைத்தனர். உடலை அரசு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு