தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றைத் தட்டிக்கேட்டுவந்த பொதுநலவாதியான ஆடிட்டர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் மகன் உட்பட நான்கு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தஞ்சாவூர், கரந்தை சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். வயது 45. ஆடிட்டரான இவர், தன் வீட்டுக்கு அருகிலேயே பண்ணை அமைத்து ஆடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடுப்பட்டுவருகிறார். பண்ணைக்கு எதிரிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் குளியலறை, கழிவறையை ஒப்பந்தம் எடுத்து நடத்திவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கழிவறை ஏலம் எடுத்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் ஒருவருக்கும், ஆடிட்டருக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பண்ணையில் தங்கியிருந்த ஆடிட்டர் மகேஷ்வரனை நான்கு பேர்கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``ஆடிட்டர் மகேஷ்வரன் அப்பகுதியில் எந்தத் தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்டு வந்திருக்கிறார். அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பயன்படுத்திவருவதற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்.தெருவில் என்ன பிரச்னை என்றாலும் முதல் ஆளாக நின்று அதைத் தீர்த்துவைப்பார். தெருவாசிகள் அனைவரும் அவரை பொதுநலவாதி என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆடிட்டரின் பண்ணைக்கு எதிரிலேயே மாநகராட்சி கழிப்பறை ஒன்று இருந்தது. அதைக் கடந்த பத்து வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பெண் பிரமுகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்திவந்துள்ளார். குத்தகைப் பணத்தையும் அவர் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. குளம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்திருந்த அவர், அதற்கான பணத்தையும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கோயில் விழா எனக் கூறி அந்தப் பெண் பிரமுகர் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளார். அதையும் தட்டிக் கேட்டிருக்கிறார் ஆடிட்டர். இன்னொரு பிரமுகர் ஒருவர், `கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்’ எனக் கூறி பணம் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுப்பட்டதை அறிந்து, `வசூல் செய்த பணத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள். இல்லையென்றால் போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் `அரசு இடத்தைவெச்சுருக்குறது தப்பு. அந்த இடத்தைக் கையகப்படுத்த அதிகாரிகள் வரப் போறாங்க’ என்று சொல்லியிருக்கிறார். அந்த அ.தி.மு.க பெண் பிரமுகர் நடத்திவந்த குளியலறையை தற்போது ஆடிட்டர் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் தொடர்ச்சியாக பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆடிட்டர் மகேஷ்வரனை வெட்டிக் கொலை செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த அதிமுக பெண் பிரமுகரின் மகனான இட்லி கார்த்தி உள்ளிட்ட நான்கு பேரைப் பிடித்து விசாரித்துவருகிறோம். விசாரணையின் முடிவில் என்ன காரணத்துக்காகக் கொலை நடந்தது, குற்றவாளிகள் யார் என்கிற விவரம் தெரியவரும்” என்றனர்.
அப்பகுதி மக்கள் சிலர், ``சமூகத்துக்கு எதிராக நடைபெறும் எந்தச் செயலாக இருந்தாலும், யார் என்னவென்று பாக்காமல் தட்டிக்கேட்பார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தாலும், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் குடும்பம் நடத்திவந்தார். தெருவில் எந்த நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பார்.தப்பைத் தட்டிக் கேட்ட சமூக ஆர்வலர் ஒருவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பது பெரும் வருத்தத்துக்குரியது’’ எனச் சோகமாக தெரிவித்தனர்.