Published:Updated:

சிக்கும் கஞ்சா... அதிகம் புழங்குகிறதா... போலீஸ் நடவடிக்கை காரணமா? - பின்னணி என்ன?!

கடத்தி வரப்பட்ட கஞ்சா

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காவல்துறையினரால் கஞ்சா தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருகிறது... இதன் பின்னணி என்ன?

சிக்கும் கஞ்சா... அதிகம் புழங்குகிறதா... போலீஸ் நடவடிக்கை காரணமா? - பின்னணி என்ன?!

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காவல்துறையினரால் கஞ்சா தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருகிறது... இதன் பின்னணி என்ன?

Published:Updated:
கடத்தி வரப்பட்ட கஞ்சா

அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்!

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏதோ பெட்டிக்கடையில் கிடைக்கும் சாதாரண பொருள் போல மிக எளிதாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. கஞ்சா புழக்கம் அதிகரிப்பது குறித்து ஜூனியர் விகடனில் "இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!" என்ற தலைப்பில் விரிவான அட்டைப்படக் கட்டுரை எழுதியிருந்தோம்.

கஞ்சா
கஞ்சா

தமிழக காவல்துறை சார்பில், கஞ்சா வேட்டை 1.O,2.O,3.O என்று வெர்சன் மட்டுமே அதிகரித்துக்கொண்டே செல்கிறது தவிரக் கஞ்சா கட்டுப்படுத்தப்பட்டது போலத் தெரியவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் கொண்டுவரப்படும் கஞ்சாவைக் கட்டுப்படுத்த தவறுவதுதான் கஞ்சா புழக்கம் அதிகரிக்க மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதே சமயத்தில், கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

போலீஸ் கெடுபிடி; விலையேறிய கஞ்சா...

தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குப் பயன்படுத்தப்படும் பெருமளவு கஞ்சா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களின் வழியாகத் தமிழகம் வருகிறது. பெரும்பாலும் ரயிலில்தான் கஞ்சா கொண்டுவரப்படுகிறது. சாதாரண பொருளைப் போலக் கஞ்சாவை வாசனை சிறிதளவும் வராத மாதிரி மூட்டைகளில் கட்டி பார்சலில் அனுப்பிவைத்துவிடுகிறார்கள். குட்கா, கஞ்சா என்று தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இந்த முறைகளில்தான் தமிழகத்துக்கு வந்து சேரும். இதுபோக, சரக்கு லாரி, பேருந்து போன்ற வழியாகவும் வந்துசேருகிறது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா
கைப்பற்றப்பட்ட கஞ்சா

ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்படும் கஞ்சா, சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. சிறிய சிறிய பார்சலாகச் செல்லும் கஞ்சா, அங்குச் சிறிய பொட்டலமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது போலீஸ் கெடுபிடி இருப்பது உண்மைதான். இந்த கெடுபிடியால் கஞ்சா விற்பனை தடைப்படுவதற்குப் பதிலாக, கஞ்சாவின் விலை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பிடிபடும் கஞ்சா...

தமிழகக் காவல்துறை சார்பில் கஞ்சாவைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 36.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா பதுக்கி வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது நடவடிக்கை ஒருபுறமிருக்க, கஞ்சா மற்றும் போதைப்பொருள் தொடர்பான 637 வழக்குகளில் 1,447 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கை முடக்கும் வேலையையும் காவல்துறை தரப்பு செய்திருக்கிறது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பார்சல்கள்

சமீப காலமாகப் பிடிபடும் கஞ்சாவின் அளவு அதிகரித்திருக்கிறது. என்ன நடக்கிறது என்பது தொடர்பாகத் தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தற்போது தொடர்ச்சியாக அதிக அளவு கஞ்சா பிடிக்கப்படுவது உண்மைதான். கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன் பெயரில்தான் பல்வேறு நடவடிக்கையை காவல்துறை செய்துவருகிறது.

நடவடிக்கை அதிகரித்திருப்பதையும், வழக்குகள் அதிகம் பதிவதை வைத்துக்கொண்டு கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது என்று சொல்வது நியாயம் இல்லை. தமிழகத்தில் ஒருகட்டத்தில் கஞ்சா புழக்கம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவடைந்துவிட்டது. அதனை ஒரு நாளில் கட்டுப்படுத்திவிட முடியாது. ஒரு விஷச்செடி விரிவடைந்துகொண்டே செல்கிறது என்றால் கிளைகளை வெட்டி பயனிலை. பிடுங்கி எரியவேண்டியது அந்த செடியின் வேரைத்தான். தற்போது அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

ஆந்திராவிலிருந்து கஞ்சா எப்படிக் கொண்டுவரப்படுகிறது என்ற அனைத்து விவரத்தையும் தெரிந்துகொண்டு அங்கிருக்கும் முகவர்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் கஞ்சா கொண்டுசெல்லப்படும் வழித்தடம் மற்றும் முகவர்களின் விவரங்களைத் தெரிந்துகொண்டு அவர்களை முடக்கும் வேலையும் செய்யத் தொடங்கிவிட்டோம். கண்டிப்பாகக் கஞ்சா புழக்கம் இல்லாத நிலை தமிழகம் ஏற்படும்" என்கிறார். பொறுத்திருந்து பார்த்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தெரியும்!