சம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது? #DoubtOfCommonMan

காவல்துறை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``புகாரைப் பதிவு செய்வதற்குக் காவல் நிலைய எல்லையைக் காரணம் காட்டி தாமதம் செய்கிறது காவல்துறை. புகார்களைப் பதிவு செய்ய காவல்துறை மெத்தனப் போக்காக நடந்து கொள்கிறதா? வேறோர் எல்லைக்குள் வரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் புகாரைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றிவிட வழி இருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் முத்துக்குமார் இருளப்பன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
விபத்து, திருட்டு இவை காரணமாகக் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கலாம் என்றவுடன் மக்கள் மத்தியில் எழும் கேள்வி புகாரை எந்தக் காவல் நிலையத்தில் பதிவுசெய்வது என்பதே. புகாரை சம்பவம் நடந்த இடத்திற்கு உரிய காவல் எல்லையில் கொடுக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமா என்பதுதான்.

மக்களின் குழப்பத்திற்கு ஒரு வகையில் காவல்துறையினரும் காரணமாகின்றனர். ஒரு புகாரை அளிக்க காவல்துறையைப் பாதிக்கப்பட்டவர்கள் நாடும்போது சம்பவம் நடந்தது எங்கள் காவல்நிலைய எல்லையில் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறி புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவிடும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
இதுகுறித்து, கோவை மாநகர முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரைத் தொடர்பு கொண்டு பேசினோம்,
``ஒரு புகாரைக் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையில்தான் அளிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் சம்பவம் நடந்த இடத்தின் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. புகார் அளிப்பதற்குக் காவல் நிலைய எல்லைகள் ஒருபோதும் தடையாக அமைவதில்லை. பாதிக்கப்பட்டவர் புகாரினை எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.
மக்களிடையே நிலவும் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க காவல்துறை சார்பில் நாடெங்கும் `ZERO F.I.R' என்ற திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் ஒரு புகாரை எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கொடுக்கப்படும் புகாரின்மேல் முதற்கட்ட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குத் தகவல் பரிமாற்றப்பட்டு அந்தக் காவல் நிலையத்தில் புகாரின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சில தவிர்க்க முடியாத சமயங்களில் பாதிக்கப்பட்டவரால் நேரில் சென்று புகார் அளிக்க முடியாது, அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் ஆன்-லைன் மூலமாகக்கூட தங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, பின்னர் புகாரின் மேல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆனால், இன்றும்கூட சில காவல் நிலையங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் புகாரினைப் பெற்று கொள்ளாமல், காவல் நிலைய எல்லையைக் காரணம் காட்டி மக்களை அலைக்கழிக்கின்றனர். அதற்கு முதன்மைக் காரணம் அவர்களின் சோம்பேறித்தனமே, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஏற்கெனவே வேலைச்சுமை அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் புகாரை வாங்க மறுப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்திலும் அதற்கு இடமில்லை. சொல்லப்போனால் பாதிக்கப்பட்டவரின் புகாரை வாங்கமறுப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும்.

அப்படி எங்காவது இதுபோன்று நடந்தால், முதலில் மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குப் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க மறுத்தது குறித்து தெளிவாய் எழுத்துபூர்வமாக மனு அளிக்க வேண்டும், அவர் அதைப் பார்த்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க ஆணையிடுவார்.
அப்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கே தெரியப்படுத்தியும் பலன் இல்லாமல் போகும் பட்சத்தில் அடுத்து மக்கள் அணுக வேண்டியது நீதிமன்றத்தைத்தான்.
நீதிமன்றத்தை நாடும்போது கண்டிப்பாகப் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடும். உத்தரவிட்ட 14 நாள்களுக்குள் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கவேண்டும். காவல்துறை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் எங்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என்று குழம்பவோ தயங்கவோ வேண்டாம்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!