Published:Updated:

`வனத்துக்குள் மர்ம நபர்கள் நடமாட்டம்..!' - மேற்குத்தொடர்ச்சி மலையில் என்ன நடக்கிறது?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட செயல்கள் நடக்கும் நிலையில், அண்மைக்காலமாகத் தீவிரவாத கும்பலின் நடமாட்டமும் இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் வனத்துறையினருக்கு எழுந்திருக்கிறது.

குற்றவாளிகளைப் பிடித்த வனத்துறையினர்
குற்றவாளிகளைப் பிடித்த வனத்துறையினர்

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. களக்காடு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மான், மிளா ஆகியவற்றை அடித்துச் சமைத்துச் சாப்பிட்ட சிலரை கடந்த இரு வாரங்களாகக் கைது செய்து வருகின்றனர்.

குப்பைக்குள் ஒளிந்த 8 அடி நீள சாரைப் பாம்பு - எரித்துக்கொன்ற வனத்துறை ஊழியர்கள்!

இந்த நிலையில், சிவகிரி வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்ததால் வனப்பகுதியில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

காட்டுக்குள் இருந்த கும்பலைப் பிடிக்க வனத்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். ஆனால், இருவர் தப்பியோடிவிட்ட நிலையில் நான்கு பேர் மட்டும் பிடிபட்டார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சஞ்சீவி, சிவகிரியைச் சேர்ந்த லிங்கம், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அடர்ந்த வனப்பகுதி
அடர்ந்த வனப்பகுதி

பிடிபட்ட சஞ்சீவி என்பவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றியவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட கும்பலிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருப்பதில்லை. ஆனால், இவர்கள் எதற்காகத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் திரிந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. அதனால் இந்தக் கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் கேரளா எல்லைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதால் இவர்களுக்கும் அந்தக் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடக்கிறது.

பிடிபட்ட நபருடன் வனத்துறை பணியாளர்கள்
பிடிபட்ட நபருடன் வனத்துறை பணியாளர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதாகப் பேச்சி என்பவர் இன்று கல்லிடைக்குறிச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மலைப் பகுதியில் நடக்கும் இத்தகைய சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த வனத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.