Published:Updated:

கடலூர்: பெட்ரோல் தொழிற்சாலையில் கொள்ளை; போலீஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது உண்மையா?!

தொழிற்சாலை - கோப்புப்படம்

கடலூரில் தனியார் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் நடக்கும் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: பெட்ரோல் தொழிற்சாலையில் கொள்ளை; போலீஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது உண்மையா?!

கடலூரில் தனியார் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் நடக்கும் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தொழிற்சாலை - கோப்புப்படம்

நாகர்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையை கட்டுவதற்கு திட்டமிட்டது. அதற்காக சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2011-ம் ஆண்டு கட்டுமானப் பணியை துவக்கியது. ஆனால், அந்த பணி முடியும் நேரத்தில் தானே புயல் வீசியதால் தொழிற்சாலை முழுவதும் சேதமடைந்தது. அதையடுத்து அந்த நிறுவனம் திவால் ஆனதால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. அதையடுத்து தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம் மூலம் அந்த தொழிற்சாலையை கையகப்படுத்தியது ஹால்தியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம். அந்த இடத்தில் ஹால்தியா நிறுவனம் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தது முந்தைய அ.தி.மு.க அரசு.

ஆனால், அந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் ஆண்டுக்கணக்கில் பராமரிப்பின்றி கிடக்கும் அந்த தொழிற்சாலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்பு, தாமிரம் மற்றும் அலுமினியப் பொருள்கள் கொள்ளைக் கும்பலால் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2,000 டன் எடையுள்ள உலோகங்களும், கேபிள், ஹைமாஸ் விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருள்களும் திருடு போயிருப்பதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலையில் காவலாளிகளோ அல்லது பாதுகாப்பு சுவர்கள் மற்றும் பென்சிங்கோ இல்லாததால் அக்கம்பக்கத்து கிராமத்திலுள்ள கொள்ளைக் கும்பல்கள் இரவு பகலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆண்டுக்கணக்காக நடைப்பெற்றுவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 கொள்ளை
கொள்ளை

இந்த நிலையில், இன்று காலை அந்த தொழிற்சாலையில் கொள்ளைக்கும்பல் பொருள்களை கொள்ளையடிப்பதாக புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான 6 போலீஸார்கள் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. சம்பவம் குறித்து விசாரிக்க கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசனை தொடர்புகொண்டபோது, ``பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன என்பது தவறான தகவல். வீசப்பட்டது வெறும் பீர் பாட்டில்கள்தான். தொடர்ச்சியாக அங்கு திருட வருபவர்கள் போலீஸை பார்த்ததும் அருகிலிருந்து பீர் பாட்டிலை எடுத்து வீசியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடலூர்: பெட்ரோல் தொழிற்சாலையில் கொள்ளை; போலீஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது உண்மையா?!

தொழிற்சாலையை சுற்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாததால் அக்கம்பக்கத்து கிராமத்தில் இருப்பவர்கள் அங்கிருக்கும் பொருள்களை எடுத்துச் செல்கின்றனர். இந்தச் சம்பவங்களில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்திருக்கிறோம். 15 பேரை ரிமாண்ட் செய்திருக்கிறோம். இன்றும் அப்படி ஒரு தகவல் கிடைத்ததால்தான் போலீஸார் சென்றனர். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

சிதம்பரம் சரக டி.எஸ்.பி ரமேஷ்ராஜை தொடர்புகொண்டு கேட்டபோது, ``போலீஸார் போகும்போது பாட்டில்களில் மண்ணெண்ணையை நிரப்பி, திரி வைத்து வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். அதை வீசியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து வழக்கு பதிவுகள் செய்துவருகிறோம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவ இடத்திற்கு சென்ற புதுச்சத்திரம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வினிதாவை தொடர்புகொண்டபோது, “எங்கள் மீது பெட்ரோல் பாட்டில்கள் வீசப்படவில்லை. நள்ளிரவு 1 மணிக்கு எங்களுக்கு போன் செய்த அந்த தொழிற்சாலையின் காவலாளிகள், யாரோ சிலர் தங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதாக கூறினார்கள். அதனடிப்படையில் நானும், எஸ்.ஐ உள்ளிட்டவர்களும் அங்கு சென்றோம். அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர். காவலாளிகளை நோக்கித்தான் அந்த பெட்ரோல் பாட்டில்கள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால் இருதரப்பினருக்கும் 100 மீட்டர் இடைவெளி இருந்ததால் யாரும் பாதிக்கப்படவில்லை. அதன்பிறகு அங்கு வெடிக்காமல் கிடந்த பெட்ரோல் பாட்டில்களை கைப்பற்றி விசாரணை செய்துவருகிறோம்” என்றார்.

``இந்தச் சம்பவத்தில் மாவட்ட எஸ்.பி வெறும் பீர் பாட்டில்கள்தான் வீசப்பட்டன என்றும், சிதம்பரம் சரக டி.எஸ்.பி மண்ணெண்ணெய் பாட்டில்கள்தான் வீசப்பட்டன என்றும் கூறுகிறார்கள். அதேசமயம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் வீசப்பட்டது பெட்ரோல் பாட்டில்கள் என்கிறார். போலீஸார் கண் முன்னே நடைப்பெற்ற இந்தச் சம்பவத்தில் எது உண்மை என்று அவர்கள்தான் கூற வேண்டும். அதேசமயம் எந்தவித பாதுகாப்பும், சுற்றுச்சுவர்களும் இல்லாமல் 2,100 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் ஒரு தொழிற்சாலையை ஒரு சிறிய காவல் நிலையத்தால் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். பராமரிப்பின்றி கிடக்கும் இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கணக்கில் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்..?" என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism